மதுபானம் கொடுக்காத டாஸ்மாக் கடை மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல்குண்டு வீசிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம், ஜெய் கார்டன் ஆற்காடு சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்த பின் கடையை ஊழியர்கள் மூடி இருக்கின்றனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த இளைஞர் டாஸ்மாக் கடைக்கு வந்து இருக்கிறார். இதையடுத்து, தன்னிடம் இருந்த ரூ. 100 கொடுத்து சரக்கு கொடுக்கும் படி கேட்டு இருக்கிறார். கடையை மூடி விட்டதாக திருத்தணியைச் சேர்ந்த ஊழியர் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து, இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், பக்கத்து தெருவில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு, அதிலிருந்து பெட்ரோலை மது பாட்டிலில் நிரப்பி இருக்கிறார். அதன்பின், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் நெருப்பை பற்ற வைத்து அந்த டாஸ்மாக் கடையின் மீது வீசியுள்ளார். இதனால், கடையின் ஷட்டர் தீப்பிடித்து எரிந்தது. இதனை தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்கள் தீயை உடனே அணைத்தனர். அதன்பின்பு அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து வளசரவாக்கம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.