இந்திய செஸ் விளையாட்டு வீரர்களை அவமதித்த ஆளும் கட்சிக்கு, தமிழக பா.ஜ.க. தரமான பதிலடியை கொடுக்கும் விதமாக காணொளி ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது.
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம், அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28- ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போட்டிகள், அடுத்த மாதம் ஆகஸ்டு 10- ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இந்தியாவில், முதன் முறையாக இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் உள்ளிட்டவர்கள் இந்த செஸ் திருவிழாவில் கலந்துக் கொள்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 19- ஆம் தேதி ஒலிம்பியாட் போட்டியின் தீப தொடர் ஓட்டத்தை பாரதப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்த வகையில், இந்த தீப தொடர் 40 நாட்களில், இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள முக்கியமான 75 நகரங்களில் பயணித்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு வந்தடைகிறது. இதனை தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் விதமாக வருகிற 28- ஆம் தேதி சென்னை வருகிறார். இதனை தொடர்ந்து, தி.மு.க. எம்.பி. கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்கள் பாரதப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விழா அழைப்பு இதழை வழங்கி இருந்தனர்.
இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த காணொளி ஒன்றினை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டவர்கள் நடித்து இருந்தனர். ஆனால், இக்காணொளியில் செஸ் விளையாட்டின் மூலம் இந்தியாவிற்கே, பெருமைச் சேர்த்த விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பிரக்ஞானந்தாவை விடியல் அரசு புறக்கணித்து அவமதிப்பு செய்து இருந்தது.
நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களை புறக்கணித்து விட்டு, ’தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்திற்கு’ பொதுமக்களின் வரிப்பணம் தான் கிடைத்ததா? என பொதுமக்கள், நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில் தான், ’செஸ் விளையாட்டின் மூலம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களை தமிழக பா.ஜ.க. பெருமைப்படுத்தும் விதமாக காணொளி ஒன்றினை தற்பொழுது வெளியிட்டு இருக்கிறது.