மக்கள் வரிப் பணத்தை தமிழக அரசு தொடர்ந்து வீணடித்து வருவதாக பொதுமக்கள் விடியல் அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு மக்களின் வரிப்பணம் பலவகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00,000-க்கும் மேல் கடன் உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, 2,500 கோடியில் சென்னையில் பூங்கா. 100 கோடி-யில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் என தி.மு.க. அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து, சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்ப் பலகைகள் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யும் விதமாக ரூ.8.43 கோடி நிதியை சென்னை மாநகராட்சி அண்மையில் தனது பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து இருந்தது. இதுபோன்ற, பயனற்ற திட்டங்களை அறிவிக்க தான் முதல்வருக்கு 5 பொருளாதார நிபுணர்களா? என்ற கேள்வியை மக்கள் முன்வைத்து வருகின்றனர். ஏற்கனவே, மின் கட்டண உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, பால்பொருட்கள் விலை உயர்வு, என தமிழக மக்களை விடியல் அரசு கடுமையாக துன்புறுத்தி வருகிறது. இதுதவிர, தமிழகத்தில் மிக கடுமையான நிதிச்சுமை இருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி வருகிறார்.
இந்த நிலையில் தான், மெரினா கடலுக்கு நடுவே 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை அடுத்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் வரை தி.மு.க. அரசிற்கு தங்களது பசுமையான வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.