குடிகார தந்தையை திருத்த வேண்டி பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு வாக்குறுதியை வழங்கி இருந்தனர். அந்த வகையில், இளம்பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பிலுமிருந்து தி.மு.க.விற்கு பெரும் அளவு ஆதரவு கிடைத்தன.
இதன்காரணமாக, தி.மு.க. அரியணையில் அமர்ந்தது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். விடியல் அரசு அமைந்து 2 வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறது. எனினும், தாம் கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் இன்றுவரை நிறைவேற்றவில்லை என்பதே கசப்பான உண்மை. இது ஒருபுறம் இருக்க, நாளுக்கு நாள் மதுவால் ஏற்படும் உயிரிழப்புகள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனிடையே, கள்ளச்சாராயம் அருந்தி 23-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் அண்மையில் தமிழகத்தையே உலுக்கி இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், குடிகார தந்தையின் தொல்லை தாங்க முடியாமல், வேலூரை சேர்ந்த விஷ்ணு பிரியா எனும் மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, 11-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீ கணேஷ் எனும் மாணவன் தனது குடிகார தந்தையை திருத்த வேண்டி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்நாட்களில் தமிழக மக்களிடையே பேசுப்பொருளாக மாறியிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், மாணவி விஷ்ணு பிரிவியாவின் மரணம் தமிழக மக்களிடையே மீண்டும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை காவு கொடுத்தால் பூரண மதுவிலக்கை இந்த திராவிட அரசு கொண்டு வரும் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.