ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே?

ஏழை மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி எங்கே?

Share it if you like it

ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வழங்கிய நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா? என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விடியல் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இதோ.

மத்திய அரசின் சமக்ரஹ சிக்‌ஷா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான கல்விச் செலவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு மாநில அரசு வழியாக செலுத்தி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டு 1,598 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 1,421 கோடி ரூபாயும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிலையில் இரண்டு ஆண்டுகளாக தமிழக பள்ளிகளுக்கு மழலையர் வகுப்பிற்கான நிதி வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இரண்டு ஆண்டுகளாக இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி என்ன ஆனது? தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் 25% இடங்களை, ஏழை எளிய மாணவர்கள் கல்விக்காக ஒதுக்கீடு செய்ய விரும்பாத தி.மு.க. இந்தத் திட்டத்தை முடக்க நினைக்கிறதோ என்ற வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கின்றன.

அறிவாலய அரசு, ஏழை எளிய மாணவர்கள் கல்வி பெறுவதை தடுக்க முயற்சிக்காமல், உடனே பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் இந்த ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


Share it if you like it