நடிகர் வடிவேலு உள்ளிட்டவர்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரிஷ் தலைமறைவு ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் பிப். 26-ஆம் தேதி ‘சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்’ என்ற தனியாா் அமைப்பு விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்த வகையில், திரைப்பட இசையமைப்பாளா் தேவா, நடிகா் கோகுல், நடன இயக்குநா் சாண்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் ஈரோடு மகேஷ் மற்றும் கோபி – சுதாகர் உள்பட 40 பேருக்கு கௌரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் வழங்கினாா். இந்நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பல்கலைக்கழகம் தரப்பில் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, கோட்டூா்புரம் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், போலி கெளரவ டாக்டா் பட்டம் வழங்கிய ஹரிஷ் தற்போது தலைமறைவாகி உள்ளார். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.