தேசவிரோத சக்திகளின் நிரந்தர கருவியாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ; “இந்தியாவின் உறுதி, அதன் வலிமையான ஜனநாயகம் மற்றும் தீர்க்கமான அரசாங்கத்தின் மீது தேச விரோத சக்திகளுக்கு எப்போதுமே பிரச்சினைகள் உண்டு. இந்திய ஜனநாயகத்தை விமர்சித்ததன் மூலமும், இந்திய ஜனநாயகத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று அந்நிய மண்ணில் தெரிவித்ததன் மூலமும் நம் நாட்டின் இறையாண்மை மீது ராகுல் காந்தி பெரிய தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்திய மக்களால் திரும்ப திரும்ப நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி, இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் நிரந்தரமான கருவியாக மாறி விட்டார். ‘இந்தியாவை நீண்ட காலமாக ஆண்ட பிரிட்டன் மண்ணில் இருந்து கொண்டு இந்தியா, இந்திய நாடாளுமன்றம், அதன் ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் ஆகியோரை ராகுல் காந்தி அவமானப்படுத்தி விட்டார். ராகுல் காந்தியின் செயல் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவர்களுக்கு பலம் சேர்ப்பதாக அமைந்து விடும்” என்று ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.