தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் ஸ்ரீதர் பேசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூரில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அவை தலைவர் ஸ்ரீதர் இவ்வாறு பேசினார் :
‘‘சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியில் கிளை செயலாளர்கள் தான் ஆணி வேர். அவர்களை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என பேசினார். எனவே, திருப்பத்தூர் நகரத்தில் கிளை செயலாளர்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். 6-வது முறையாக இந்த கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால், இது முதல் கூட்டமாக தற்போது நடக்கிறது.
திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. எனவே, இங்குள்ள தி.மு.க. கிளை செயலாளர்களை நகராட்சி கவுன்சிலர்கள் நல்ல முறையில் கவனிக்க வேண்டும். அனைத்து கிளை செயலாளர்களுக்கும், 36 வார்டு களையும் பிரித்து கொடுக்க வேண்டும். அப்போது, கட்சி வளர்ச்சி பணிகள் நன்றாக இருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பேசும்போது, நாடாளுமன்ற தேர்தலும், சட்டப்பேரவை தேர்தலும் 2024-ல் ஒன்றாக நடக்கும் என்றார். அதுநடந்து விடும் போல உள்ளது. நான் எனது மனதில் பட்டதை பேசுகிறேன்.
இங்குள்ள மாவட்டச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பால்வளத்துறை தலைவர் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். ஏதேதோ சொல்கின்றனர். அதே போல எங்களுக்கும் 2 சதவீதம் வேண்டாம், 1 சதவீதம் கொடுங்கள். அதுவும் முடியாது என்றால் கால் சதவீதமாவது கொடுங்கள். எங்களுக்கும் வயிறு இருக்கிறது, குடும்பமும் இருக்கிறது. எங்களுக்கு சற்று ஈரத்தை காட்டுங்கள்’’ என்று கூறினார். தி.மு.க. அவை தலைவரின் இந்த பேச்சால் அரங்கத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.