தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தி.மு.க. அரசு திட்டமிட்டு அவமதிப்பு செய்து விட்டதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 2023 – ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம், தொடங்கிய மறுகணமே ஆளுநர் உரையை முறையாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இதனை தொடர்ந்து, அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், அரசு தயாரித்த உரையின் பாதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி பேரவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
ஆளுநர் ஆர் .என். ரவி பேரவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;
தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கேவலமான செயலை இன்று அரங்கேற்றியுள்ளனர். வாரிசு அரசியல் குறித்து பேசாமல் பார்த்து கொள்ளவதற்காகவே, இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். ஆளுநரை வைத்து, தி.மு.க.வின் சித்தாந்தத்தை புகழ்பாட வைக்க முடியாது. இதை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.
ஆளுநர் உரையை கூட அவரிடம் பேசி ஒப்புதல் வாங்காமல் இருப்பது உறவு பேணாத நிலையையே காட்டுகிறது. நீட் விவகாரத்தில் ஆளுநர் கேட்ட விவரத்தை ஆளும் கட்சி ஏன்? பொது வெளியில் சொல்ல மறுக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் அரசு சொல்வதை ஆளுநர் செய்யவில்லை என்பதற்காக அவரை அழைத்து வேண்டுமென்றே அசிங்கப்படுத்தி இருக்கிறது என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இவ்வாறு வானதி சீனிவாசன் திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தனது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.