தமிழகத்தில் கருத்துரிமையை தி.மு.க., அரசு நசுக்கி வருவதாகவும், அதற்கு காவல்துறை துணை போவதாகவும் ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
கடந்த, மூன்றாண்டு தி.மு.க., ஆட்சியில் ஆளும் கட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக,தி.மு.கவினர் கொடுத்த புகாரின் பேரில் ஏராளமானவர்களை கைது செய்தும், வழக்கு பதிவு செய்தும் உள்ளது, தமிழக காவல்துறை. சிலரை வெளிமாநிலங்களுக்கு சென்று கூட, பயங்கரவாதிகளை போல கைது செய்து வந்தது.
இதுபோன்ற வழக்குகளுக்கு கைது தேவையற்ற நடவடிக்கை என, சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்தது. சமீபத்தில் பிரபல ‘யுடியூபர்’ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ச்சியாக, தி.மு.க., அரசின் ஊழல்களையும், நிர்வாக சீர்கேட்டையும் விமர்சித்து வந்தார்.
காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்ததாகவும், அந்த வகையில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியுள்ளது.
சவுக்கு சங்கர் அவதுாறான கருத்துக்களை பொதுவெளியில் பேசியிருந்தால், அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதில், யாருக்கும் எவ்வித ஆட்சேபனையும் இருக்க போவதில்லை.
ஆனால், தி.மு.க., அரசு அவரை கைது செய்த விதமும் கொண்டு சென்ற போது, நடந்த விபத்தும், புது வகையான, என்கவுன்டர் நிகழ்வா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அரசும், காவல்துறையும் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம்.
எனவே, தி.மு.க., அரசின் குறைகளை விமர்சிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, எதிரான விமர்சன குரல்வளையை நசுக்கும் அராஜக போக்கை தொடர்ந்து தி.மு.க., அரசு செய்து வருகிறது. ஊழல் வழக்கில் கைதான தி.மு.க., அமைச்சர்களுக்காக ஓடோடி வந்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் இவ்விவகாரத்தில் மவுனம் சாதிப்பது தி.மு.க., அரசின் துஷ்பிரயோகம்.
எனவே, சவுக்கு சங்கர் விஷயத்தில், தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும். தி.மு.க., அரசின் தொடர்ச்சியான மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளை மக்கள் திரண்டு, ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்து தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.