ஹிந்துக்களின் நம்பிக்கையாக இருக்கும் ராமர் பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி, அமைந்த நாளில் இருந்தே ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகின்றன. தி.மு.க.வின் ஆசி பெற்ற யூ டியூப் சேனலான யூ2 புரூட்டஸ் தில்லை நடராஜரை இழிவுப்படுத்தி இருந்தது. இதையடுத்து, தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தொடர்ந்து ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தி.மு.க. பொருளாளரும், மக்களவை எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் ’பாதை மாறா பயணம்’ என்கிற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, வைரமுத்து, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவ்விழாவில் கலந்து கொண்ட, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசினார் ;
மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கி இருந்தால், நீதிமன்றம் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் சிங்கள தீவிற்கு பாலம் அமைப்போம் என பாரதி சொன்னது போல டி.ஆர்.பாலு பாலம் அமைத்து இருப்பார். அந்த பாலத்தை கலைஞர் திறந்து வைத்து இருப்பார். எழுதி வைத்து கொள்ளுங்கள் நிச்சயம் அந்த பாலம் அமைக்கப்படும். அதனை, தளபதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசி இருக்கிறார்.
அமைச்சர் துரைமுருகனின் இந்த சர்ச்சை கருத்து கோடிகணக்கான ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.