ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வனை ஆதரித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக தேனி நகரின் முக்கிய சாலைகளில் திமுக கொடிகள் ஊன்றப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுகவினரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதில் தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் திமுக கொடியை எடுத்து வந்த தூய்மை பணியாளர்கள், அதை அங்கு அவர்களே ஊன்றும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.