முதலை வாயில் டேப் போட்டு ஒட்டி, தமிழக அமைச்சர் மதிவேந்தன் போட்டு ஷூட் நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
வனம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு டாப் ஸ்லிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வனப் பகுதிகளில் ஆங்காங்கே ஜீப்பை நிறுத்தி அவர் போட்டோ ஷூட் நடத்தியது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து, வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர், அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடியின பெண்களுக்கு தையல் மிஷன் உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரக பகுதியில், வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் முதலைப் பண்ணையை ஆய்வு செய்தார். இப்பண்ணையில் 22 பெண் முதலைகள் உட்பட 88 நன்னீர் முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட தொட்டியை அமைச்சர் திறந்து வைத்தார். அப்போது, முதலைக்குட்டியை தண்ணீரில் விடுவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் முதலைக்குட்டி கடித்து விடக் கூடாது என்பதற்காக அதன் வாயில், கருப்பு கலர் டேப்பை போட்டு ஒட்டி, போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் அமைச்சர் மதிவேந்தன். இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரின் செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.