திருமணமாகி 20 வருடத்திற்கு மேலாகியும் குழந்தை வேண்டாம் என்று சொல்லி விட்டார். தற்போது எனக்கு ஜீவனாம்சமும் தர மறுக்கிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். இவர், தி.மு.க. கூட்டணியில் இணைந்து பண்ருட்டி தொகுதியில் போட்ட்யிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவரது முன்னாள் மனைவி காயத்ரி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு காஞ்சிபுரம் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். வழக்கு விசாரணை வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி, “கட்சியோட பேரோ தமிழக வாழ்வுரிமைக் கட்சி. தமிழகத்திற்கே வாழ்வதற்கு உரிமை வாங்கித் தருவாராம். ஆனால், அவரை கல்யாணம் பண்ணிக் கொண்டு 20 வருடத்திற்கு மேல் வாழ்ந்த எனக்கு வாழ்வதற்கு உரிய நிவாரணமோ, நியாயமோ வழங்கவில்லை. இவர்கிட்ட இருந்து எனக்கு விடுதலையும், பாதுகாப்பும் இருந்தால் நன்றாக இருக்கும். மாதம் 25,000 ரூபாய் எனக்கு கொடுக்க வேண்டுமென கோர்ட் ஆர்டர் போட்டது. ஆனால், இதுவரை வழங்கவில்லை.
சென்னை வளசரவாக்கத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது. அதையும் அவர் ஆக்கிரமிப்பு பண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் ஆளும் கட்சி கூட்டணி எம்.எல்.ஏ. என்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் வருமான ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறேன். ஆனால், அவர் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சாதாரண எம்.எல்.ஏ.தானாம். அதனால வருமானம் இல்லையாம். அதனால பணமே இல்லையாம். அவர் இப்ப 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆனால் பணம் இல்லை, தரமுடியாது என்கிறார்” என்று கூறியிருக்கிறார்.