காமராஜர் பற்றி அவதூறு பேச்சு: ஆ.ராசாவை கண்டித்து நாடார்கள் ஆர்ப்பாட்டம்!

காமராஜர் பற்றி அவதூறு பேச்சு: ஆ.ராசாவை கண்டித்து நாடார்கள் ஆர்ப்பாட்டம்!

Share it if you like it

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவை கண்டித்து நாடார் பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் சமீபத்தில் நடந்த சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, “தமிழ்நாடு என்கிற பெயரை காமராஜர் ஏற்றுக்கொள்ளாததால்தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது” என்று தெரிவித்திருந்தார். இதற்கு நாடார் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், காமராஜர் பற்றிய உண்மை வரலாற்றை திரித்து பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தனர். அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு நாடார் பேரவைத் தலைவரும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவருமான என்.ஆர்.தனபாலன் தலைமை வகித்தார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் பத்மநாபன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் ஜெ.முத்து ரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஸ்டீபன், அகில இந்திய நாடார் மகாஜனசபை தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் த.ரவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பெருந்தலைவர் காமராஜரை பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இழிவுபடுத்தி பேசியதற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் நாடார் சமுதாய மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். மேலும், ஜாதிகளை பற்றியும், மறைந்த தலைவர்கள் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசுவது ஆ.ராசாவுக்கு கைவந்த கலையாகி விட்டது. எனவே, நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு அனைத்து சமுதாய மக்களும் முடிவு கட்டுவார்கள்” என்றார்.

தமிழ்நாடு நாடார் பேரவைத் தலைவர் என்.ஆர்.தனபாலன் பேசும்போது, “ஆ.ராசா ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர் சார்ந்த சமுதாயத்தினர் கோயிலுக்கு போக முடியாத நிலையில், அதே சமுதாயத்தை சேர்ந்தவரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் காமராஜர். கக்கன் போன்றோருக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளித்தார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். காமராஜர் அனைத்து சமுதாயத்துக்கும் சொந்தக்காரர். இது ஒரு அடையாள போராட்டம்தான். முதலமைச்சரிடம் இருந்து பதில் வராவிட்டால், அடுத்தகட்டமாக தமிழகம் தழுவிய போராட்டம் வெடிக்கும்” என்றார். ஆக, இதன் மூலம் தி.மு.க.வுக்கு எதிராக நாடார் சமூகம் திரும்பி விட்டது என்பது தெளிவாகிறது.


Share it if you like it