ஆமா, என்னிடம் 10,000 கோடி ரூபாய் இருக்கிறது. அதுக்காக வந்து அள்ளிக்கிட்டு போயிருவியா என்று தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தன்னையும் அறியாமல் உளறிக் கொட்டிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி, தி.மு.க. ஃபைல்ஸ் என்கிற பெயரில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலரும் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். அப்போது தன்னிடம் 10,000 கோடி ரூபாய் சொத்து இல்லை என்று கூறிய எம்.பி. டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜரானார் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 10,000 கோடி ரூபாய் சொத்து எப்படி வந்தது என்பதை டி.ஆர்.பாலு மறைக்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், தி.மு.க. கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, தன்னிடம் 10,000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்று தன்னையும் அறியாமல் உளறிக் கொட்டி இருக்கிறார். நிகழ்ச்சியில் பேசிய டி.ஆர்.பாலு, “என்னிடம் 10,000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அண்ணாமலை கூறியிருக்கிறார். ஆமா, என்னிடம் 10,000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அதுக்காக வந்து அள்ளிக்கிட்டு போயிருவியா? அப்படியே இருந்தாலும் அது சட்டப்பூர்வ சம்பாதித்ததாகத்தான் இருக்கும்” என்று தன்னையும் அறியாமல் உளறிக் கொட்டியவர், பின்னர் சுதாரித்துக் கொண்டு, என்னிடம் 10,000 கோடி ரூபாய் இருப்பதற்கு சான்ஸே கிடையாது. இதை நான் பேசியிருக்கவே கூடாது. இனி பேசமாட்டேன்” என்று கூறி சமாளித்தார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.