மருத்துவ கல்வியை வியாபாரமாக மாற்றி அதில் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வந்த மாபியா கும்பல்களின் முதுகெலும்பை உடைக்கும் விதமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு நீட் தேர்வினை அமல்படுத்தியது.
கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் கூட இத்தேர்வினை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏழை எளிய மக்களுக்கு எதிரானது, அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிரானது என்றெல்லாம் மக்களை திசை திருப்பும் முயற்சியில் உள்ளூர் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களின் இந்த பொய் பிரச்சாரத்தை தோலுரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நீட்தேர்வு முடிவுகள் வெளிவரும் போது தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளிமாணவர்கள், அதிலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடி பிரிவை சேர்ந்த பலரும் தேர்ச்சி பெற்று வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டும் கூட தேனியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் முன்னிலை இடம் பெற்று தேர்ச்சி பெற்றார். மேலும் பல அரசு பள்ளி மாணவர்களும், அதிக மதிப்பெண் பெற்று சாதித்தனர். இந்த தகவல்களை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சகம் வெளியிடவும் செய்தனர்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள், நவம்பர் 1-ல் வெளியாகி உள்ளது. முந்தைய ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட 8 நாட்கள் கடந்துவிட்ட போதும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் இதுவரை முறையாக தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை வெளியிடப்படவில்லை.
சில அரசு பள்ளிகளும், நீட் ஒருங்கிணைப்பாளர்களும், அரசின் இலவச நீட் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை தெரிவித்து வருகின்றனர். அதில் “தேசிய அளவில் முன்னிலை பெற்றவர்கள் பட்டியலில்” தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நேர்மறையான விவரங்கள் வெளிவந்தால் நீட் தேர்வுக்கு எதிரான விஷம பிரச்சாரம் நீர்த்துப் போய்விடும் என்பதால் தமிழக ஆளும் கட்சி இதை முற்றிலும் மூடி மறைக்க முயற்சிக்கிறது. இது மேலும் பலமானவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல் என்பதை அவர்கள் விரைவில் புரிந்துகொள்ள வேண்டும்.