ஒரு மாத அமைதிக்குப் பின்… தி.மு.க.வை தெறிக்கவிட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

ஒரு மாத அமைதிக்குப் பின்… தி.மு.க.வை தெறிக்கவிட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்!

Share it if you like it

ஒரு மாத கால அமைதிக்குப் பின் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு தி.மு.க. தலைமையையும், அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் தெறிக்க விட்டிருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். வக்கீலான இவர், மிகச் சிறந்த எழுத்தாளும்கூட. ரயில்வே வாரிய உறுப்பினர், மத்திய திரைப்பட தணிக்கைத் துறை உறுப்பினர், மத்திய சுற்றுச்சூழல் ஆலோசனைக்குழு உறுப்பினர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராக வலம் வந்த இவர், கடந்த மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். காரணம், காங்கிரஸ் தலைவரை விமர்சித்தது. அதாவது, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில், சசிதரூரும், மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிட்டதில், சோனியாவின் ஆதரவாளரான மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றார்.

இதையடுத்து, ராதாகிருஷ்ணன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மன்மோகன் சிங் 2.0 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், மன்மோகன் சிங்கின் புகைப்படத்தில் மல்லிகார்ஜுன கார்கேயின் தலையை மார்பிங் செய்து இணைத்திருந்தார். காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்பதால், ராதாகிருஷ்ணனின் இப்பதிவு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தி.மு.க. தலைமையை தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ராதாகிருஷ்ணனை கட்சியிலிருந்து நீக்குவதாக, பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இதன் பிறகு, கடந்த ஒரு மாதமாக தி.மு.க.வைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல் அமைதியாகவே இருந்து வந்தார் ராதாகிருஷ்ணன். இந்த நிலையில்தான், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க. தலைமைக்கு எதிராக சில பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன். இன்று காலை சுமார் 6.30 மணியளவில் “இன்றைய அரசியல்” என்கிற தலைப்பில் ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் பதிவில், “நீண்ட அனுபவம், உழைப்பு இருந்தும் சரணாகதியாக வாரிசுகள் காலில் வீழ வேண்டும். ஆடியோவில், சமூக ஊடகங்களில் ஆபசாமாக திட்ட வேண்டும். சமூக ஊடகங்களில் தங்கள் பற்றி புகழ காசு கொடுத்து அடி ஆட்களை போல அரை குறை தத்திகளை அமர்த்துவது. இதுதான் பொது வாழ்வு, மக்கள் நல அரசியல். இப்படி இருந்தால் அரசியல் என்ற தளத்தில் இன்று இங்கு இருக்க முடியம். இந்த மட்டமான தகுதிகள் அவசியம். நேற்று வரை திட்டப்பட்டவன் இன்றைய நல்லவன், ஆற்றலான். இது மானம் கெட்ட பிழைப்பு. உழைப்புக்கு நன்றி இல்லை. இதுவா அரசியல்? போங்கட போக்கு அற்ற தத்திகளே.. #தகுதியே_தடை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் “திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்து ஒரு மாத கால அமைதிக்கு பின்…” என்கிற தலைப்பில் வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “எந்த உழைப்பும் இல்லாத தியாகராஜன்கள், நேற்றுவரை திட்டித் தீர்க்கப்பட்ட செந்தில் பாலாஜிகள் என பலர் படிகளே இல்லாத ஏணியின் வழியே உச்சத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்கிற போது, எங்களைப் போன்ற உழைப்பைக் கொடுத்த சுயமரியாதைக்காரர்கள் உகந்தவர்களாக இல்லாமல் போவதில் ஆச்சரியமில்லை. விடுதலை ஆகியிருக்கிறோம்.. மன அமைதி! பொதுத்தளத்தில் தொடர்ந்து இயங்குவோம்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது, தற்போதைய தி.மு.க. அமைச்சரவையில் நிதியமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதே கிடையாது. அவர், அமெரிக்காவில் வசித்து வந்தவர். அப்படிப்பட்டவருக்கு தி.மு.க. தலைமை கட்சியில் சீட் கொடுத்து நிதியமைச்சர் என்கிற உயர்ந்த பதவியைக் கொடுத்திருக்கிறது. அதேபோல, மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்குச் சென்றவர். அவர், அ.திமு.க.வில் போக்குவரத்துத்துறை இருந்தபோது, வேலைவாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர். இவர் மீதான வழக்கு தற்போதுவரை நடந்து வருகிறது. மேலும், 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்டாலின் கரூருக்கு சென்றிருந்தபோது, செந்தில்பாலாஜியைப் பற்றி கிழிகிழி என கிழித்தார். அப்படிப்பட்டவருக்கு தற்போது மின்சாரம், டாஸ்மாக் உள்ளிட்ட பவர்புல் துறைகளை வழங்கி இருக்கிறார். ஆகவே, இவர்கள் இருவரையும் சுட்டிக்காட்டி, தி.மு.க. தலைமையை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன், இப்பதிவு தி.மு.க. தலைமை மற்றும் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it