டெல்லி மாடலும்… குஜராத் மாடலும்..!

டெல்லி மாடலும்… குஜராத் மாடலும்..!

Share it if you like it

குஜராத்தில் தொலைந்துபோன 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை, உரிமையாளரிடமே திருப்பி ஒப்படைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது பாரத் ஜோடோ யாத்திரையை ஒத்திவைத்து விட்டு, குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பாரத பிரதமர் மோடியும் குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இப்பிரசாரத்தை முன்னிட்டும், தேர்தல் கருத்துக் கணிப்பு தொடர்பாகவும், பிரபல தேசிய ஊடகங்களில் செய்தியாளர்கள் டெல்லியில் இருந்து குஜராத்துக்கு வந்திருந்தனர்.

அந்த வகையில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனலின் செய்தி ஆசிரியரும், நெறியாளருமான பத்மஜா ஜோஷியும் குஜராத்துக்கு வந்திருந்தார். இந்த நிலையில், ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு திரும்பும்போது தனது செல்போனை டீக்கடையிலேயே மறந்து விட்டுச் சென்று விட்டார் பத்மஜா. இந்த செல்போனின் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரத்துக்குப் பிறகே தனது செல்போனை காணவில்லை என்பது அவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, தனது சகாக்களில் ஒருவரின் செல்போனில் இருந்து தனது செல்போனுக்கு அழைத்திருக்கிறார்.

அப்போது, பிரதீப் படேல் என்பவர், போனை எடுத்துப் பேசியிருக்கிறார். அவரிடம் தனது செல்போன் காணாமல் போன விவரத்தைக் கூறி, தனது போனை தரும்படி கேட்டிருக்கிறார் பத்மஜா. உடனே, பிரதீப் படேலும் தான் இருக்கும் இடத்தைச் சொல்லி, வந்த போனை வாங்கிச் செல்லுமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பத்மஜா, பிரதீப் படேலுக்கு நன்றி கூறி, தனது செல்போனை பெற்றுக் கொண்டார். பின்னர், அதே போனில் பிரதீப் படேலுடன் வீடியோ ஒன்றையும் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில், தனது 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான போனை திருப்பிக் கொடுத்தது குறித்து பிரதீப் படேலிடம் கேட்கிறார் பத்மஜா. அதற்கு பிரதீப் படேலோ, இதே அரவிந்த் கெஜ்ரிவாலின் டெல்லி மாடலில் போனை தொலைத்திருந்தால் திருப்பிக் கிடைத்திருக்காது. ஏனெனில், அது டெல்லி மாடம். ஆனால், இது மோடியின் குஜராத் மாடல். ஆகவேதான், உங்களது போன் திருப்பிக் கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். பின்னர், தனது போனை திருப்பித் தந்ததுக்கு நன்றி கூறி விடைபெறுகிறார் பத்மஜா. அத்துடன் வீடியோவும் முடிவடைகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், பாரத பிரதமர் மோடி தனது குஜராத் மாநிலத்தை வளர்ச்சியில் மட்டுமல்ல, நேர்மை மற்றும் ஒழுக்கத்திலும் சிறப்பாகவே வைத்திருக்கிறார் என்று புகழ்ந்து வருகிறார்கள்.


Share it if you like it