சமூகநீதி + சுயமரியாதை = ஆ.ராசா!

சமூகநீதி + சுயமரியாதை = ஆ.ராசா!

Share it if you like it

சமூகநீதி மற்றும் சுயமரியாதை பற்றி மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜா, தனது காலில் விழும் தொண்டர்களை கண்டும் காணாமல் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் சமூகநீதியையும், சுயமரியாதையும் ஆ.ராஜா காப்பாற்றிய லட்சணம் இதுதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர் ஆ.ராசா. நீலகிரி தொகுதி எம்.பி.யாகவும் இருந்து வருகிறார். தி.மு.க.வினரை பொறுத்தவரை, எதற்கெடுத்தாலும் சமூகநீதி, சுயமரியாதை என்று பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த உயர் ஜாதியினர், பட்டியல் சமூக மக்களை தரக்குறைவாக விமர்சித்து விட்டால், தாம்தூம் என்று குதித்து இதுதான் சமூகநீதியா என்று கேள்வி எழுப்புவார்கள். அதேசமயம், தி.மு.க.வைச் சேர்ந்த உயர் ஜாதியினர் பட்டியல் சமூக மக்களை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

அதேபோல, அ.தி.மு.க.வினர் அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் விழுந்தபோது, இதுதான் சுயமரியாதையா என்று கேள்வி எழுப்பி அ.தி.மு.க.வினரை கேலி, கிண்டல் செய்தனர். அதேசமயம், தி.மு.க.வினர் அக்கட்சியின் தலைவராக இருந்த மறைந்த முன்னாள் கருணாநிதி காலில் விழுந்ததை யாரும் விமர்சிக்கவில்லை. அவ்வளவு ஏன், தற்போதைய முதல்வராகவும், தி.மு.க. தலைவராகவும் இருக்கும் ஸ்டாலின் திருமண நாள் சமீபத்தில் நடந்தது. அப்போது, அமைச்சர்கள் முதல் எம்.பி.க்கள் வரை ஸ்டாலின் மற்றும் துர்கா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அப்போது, தி.மு.க.வினர் யாரும் சுயமரியாதை பற்றி வாய்திறக்கவில்லை.

இந்த நிலையில்தான், ஆ.ராசாவின் காலில் தொண்டர்கள் விழுந்த சம்பவம் சர்ச்சையாகி இருக்கிறது. ஏதோவொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆ.ராசா, மாலை நேரத்தில் தனது இல்லத்துக்கு திரும்புகிறார். அப்போது, அவரது இல்லத்தில் ஆ.ராசாவுக்காக பல தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். ஆ.ராசா காரில் இருந்து இறங்கி நடந்து வருகிறார். உடனே, ஆ.ராசாவின் காலில் விழுந்து வணங்குகிறார்கள் தொண்டர்கள். ஆனால், ஆ.ராசாவோ இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அதாவது, யாராவது தனது காலில் விழ வந்தால், அவர்களை தடுத்து தூக்குவதுதான் இந்தியர்களின் நாகரிகம். உதாரணமாக, பாரத பிரதமர் மோடியாகட்டும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாகட்டும் தனது காலில் யாராவது விழ வந்தால், அவர்களை தடுத்து நிறுத்தி விடுவார்கள். அதையும் மீறி அவர்கள் காலில் விழுந்து விட்டால், பதிலுக்கு தாங்களும் அவர்களது காலில் விழுவார்கள். இதுதான் சபை நாகரிகம்.

ஆனால், எதற்கெடுத்தாலும் சமூகநீதி, சுயமரியாதை என்று உருட்டும் ஆ.ராசா, தனது காலில் விழுந்தவர்களை மனிதானாகக்கூட மதிக்கவில்லை. ஒரு அற்ப புழுவைப் போல கருதி, கண்டும்காணாமல் எங்கோ பார்த்தபடி நடந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், சமூக நீதியையும், சுயமரியாதையும் ஆ.ராசா காப்பாற்றிய லட்சணம் இதுதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சனாதனத்தை ஒழிப்பதாகக் கூக்குரல் இடும் ஆ.ராசா, முதலில் மனிதனை மதிக்க கற்றுக்கொள்ளட்டும் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.


Share it if you like it