எச்சில் இலை எடுப்பவன், சமையல் வேலை செய்பவன் என்று கவர்னரை ஏகவசனத்தில் திட்டியதோடு, கொஞ்சம் கண் ஜாடை காட்டி இருந்தால் வீட்டுக்கு போயிருக்க முடியுமா, கையில் கிடைத்ததை எல்லாம் வைத்து வெளுத்திருப்பார்கள் என்று கொலை மிரட்டலும் விடுத்திருக்கும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
தமிழகத்தின் நிகழாண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி துவங்கியது. இதில், தனது உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததால், கவர்னர் வெளிநடப்பு செய்து விட்டார். இதை தி.மு.க.வினரால் ஜீரணிக்க முடியவே இல்லை. இதனால், கவர்னர் மீது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கடும் ஆத்திரத்தில் இருந்து வருகின்றனர். ஆகவே, கவர்னரை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் கெட் அவுட் ரவி என்று ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். அதேபோல, தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கவர்னரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், கவர்னரை தாக்கி பேசக்கூடாது, போஸ்டர் ஒட்டக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
எனினும், தி.மு.க.வில் இருக்கும் வாய்க்கொழுப்பு பேச்சாளரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான ரெட் லைட் புகழ் ஆர்.எஸ்.பாரதி, கவர்னரை அவன், இவன் என்று ஒருமையிலும் ஏகவசனத்திலும் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். அதாவது, ஜனவரி 9-ம் தேதி சட்டமன்றத்தில் கவர்னர் வெளிநடப்பு செய்த நிலையில், மறுநாள் சென்னையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரெட் லைட் புகழ் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாட்டுக்கு சோன்பப்டி விற்கவும், பானிபூரி விற்கவும் வந்தனுக்கு தமிழகத்தைப் பற்றி தெரியாது என்று சொன்னேன். கடைசியில் பார்த்தால் பீகார்காரனுங்கதான் சோன்பப்டி விற்கிறானுங்களாம். அப்படி ரயில் ஏறி வந்தவன் போல இருக்கு, இன்னைக்கு இருக்குற கவர்னர்.
எச்சில் இலை எடுக்கச் சொன்னா எத்தனைன்னு என்னாதே என்பார்கள் கிராமத்துப் பக்கம். அதுமாதிரி இலை எடுக்குறதுதான் கவர்னர் வேலை. இலையில் பரிமாறப்பட்டிருக்கும் பட்சனங்கள்தான் கவர்னரின் உரை. அதை அப்படியே சாப்பிடாமல், எல்லாவற்றையும் தள்ளிவிட்டு வேற எதையாவது கொண்டு வந்து வைத்தால், பந்தியில் இருப்பவன் சும்மா இருப்பானா? இதேபோல ஜெயலலிதா இருக்கும்போது செய்திருந்தால் அந்தாளு உதை வாங்காமல் போயிருக்க மாட்டான். சேகர்பாபுவுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் வேறுமாதிரி ஆகியிருக்கும். எங்களிடம் எத்தனையோ சேகர்பாபுகள் இருக்கிறார்கள். ஸ்டாலின் மட்டும் கொஞ்சம் கண் ஜாடை காட்டி இருந்தால் அந்தாளு வீட்டுக்கு போயிருக்க முடியுமா? எது கிடைக்குதோ அதை கையில் எடுத்து அடிச்சுட்டு போயிக்கிட்டே இருப்பார்கள்” என்று கவர்னரை கொலை செய்து விடுவோம் என்று மறைமுகமாகப் பேசியிருக்கிறார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரெட் லைட் ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சு, நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, கவர்னரை அவன், இவன் என்று ஏகவசனத்தில் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பாரதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.