ஏற்கெனவே திருமணமான தம்பதிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், தி.மு.க. அமைச்சர் பித்தலாட்டம் செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் சின்னியம்பாளையத்தில் 70 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் அனைவருக்கும் தங்கத் தாலி, பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டி.வி., மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம் மற்றும் பாத்திரங்கள் உட்பட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திக்குமார், பிரியதர்ஷிணி ஆகிய ஜோடியும் திருமணம் செய்து கொண்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ஜோடிக்கு ஏற்கெனவே திருமணம் நடந்திருப்பதுதான். அதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி, முறைப்படி பத்திரிகை அச்சடித்து, உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ பொள்ளாச்சியில் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால், 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதால், இந்த ஜோடியை மீண்டும் அழைத்து வந்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். தற்போதுதான் இந்த விஷயம் வெளியில் வந்திருக்கிறது. எனவே, இந்த ஜோடி மட்டும்தான் இப்படி அழைத்து வரப்பட்டதா அல்லது எல்லா ஜோடிகளும் இப்படி தில்லுமுல்லு செய்து அழைத்து வரப்பட்டதுதானா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதோ அந்த காணொளி…