அப்துல் கலாம்
இவரை எப்படியெல்லாம் பார்க்கலாம் ?
முன்னாள் ஜனாதிபதியாக !
நவீன இந்தியாவின் அடையாளமாக !
ஏவுகணை அறிவியல் சாதனையாளராக !
இளைய இந்திய சமுதயாத்தின் எதிர்கால நம்பிக்கையை தூண்டியவராக !
சுற்று சூழல் பற்றி சிந்திக்க தூண்டியவராக!
இயற்க்கையை நேசிக்க வளர்க்க ஊக்கு வித்தவராக!
சமூகத்தின் எல்லாதள மக்களுடன் பேச தெரிந்தவராக !
இஸ்லாமியராக பிறந்தும் கீதை அறிந்தவராக ! வீணை வாசிப்பவராக !!
நேர்மை, எளிமை ஆகியவற்றை உயர்த்தி பிடித்தவராக !
இப்படி பலரும் பலவாராக பார்க்கலாம்.
நான் இவரை இன்னும் சில அடையாளமாக பார்க்கிறேன்.
இந்தியாவின் முதல் இஸ்லாமிய ஜனாதிபதி அல்ல இவர்.
இதற்கு முன் இந்தியாவில் ஏற்கனவே இரண்டு இஸ்லாமிய ஜனாதிபதிகள் இருந்திருக்கின்றனர்..
ஆனால் இவர் தான் கட்சி சார்பில்லாமல் மேலெழுந்து வந்த முதல் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஜனாதிபதி !
முன்னாள் ஜனாதிபதிகள் ஜாகீர் உசேன் மற்றும் பகருதீன் அலி அகமது ஆகிய இவருவரும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களாக வளர்ந்தவர்கள். அவர்களின் பின்புலம் வேறு. ஜாகீர் உசேன் மிகப் பெரும் தனக்காரர். இன்றுவரை அவரது குடும்பம் காங்கிரசில் உள்ளது. அவர்களை ஜனாதிபதிகள் ஆக்கியதில் பெருமை இல்லை !
அப்துல்கலாமுக்கு முன் இது போல அரசியலில் பெரும் பங்கு வகிக்காமல் ஜனாதிபதி ஆன ஒரே நபர் டாக்டர். சர்வபள்ளி ராதா கிருஷணன். ஆனால் அவர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவராக மட்டும் இல்லாமல் ஜனாதிபதி ஆவதற்கு முன் தனிப்பட்ட முறையில் அரசியலில் இறங்கியவரே !! பின்னாளில் காங்கிரஸ் அவரை சுவிகரித்தது.
ஆனால் வாழ்நாள் முழுவதும் அரசியல் பக்கமே செல்லாமல் நாட்டுக்காக அதன் முன்னேற்றத்துக்காக உழைத்த ஒரு அறிவியல் ஆளுமை ஜனாதிபதியாவது இதுவே முதல் முறை !
இதை பாஜக மத்தியில் ஆளும் போது செய்தது தேசத்தை பற்றிய அவர்களின் பார்வையின் அடையாளம்.
காங்கிரஸ் அல்லாத கட்சி முதன் முதலாக ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்யும் நிலைக்கு வருகிறது.
என்ன செய்திருக்கலாம்??
சாதாரண கட்சியாக இருந்தால் அவர்கள் தங்கள் கட்சியில் இயக்கத்தில் இத்தனை வருடங்கள் உழைத்த ஒரு நேர்மையான மனிதருக்கு அந்த பதவியை அளித்து மகிழ்ந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் அதில் தவறு காண ஒன்றுமில்லை !
ஆனால் அப்படி செய்யவில்லை !
மாறாக இந்த நாட்டின் மீது மாறாக பற்று கொண்டு உழைத்து ஏவுகணை அறிவியலில் இந்திய தேசிய கொடியை சர்வதேச அரங்கத்தில் உயர்த்தி பிடித்த ஒரு அறிவியல் ஆளுமைக்கு – அவர் தங்கள் கட்சி சார்பில்லாதவராக இருந்தாலும் தலைமை பீடத்தில் அமர்த்தி தாங்கள் கட்சியை விட தேசத்தை அதிகம் நேசிக்கும் கூட்டம் என்று உலகுக்கு செய்தி சொன்னது.
எப்போதும் செருப்பு தைப்பவர் மகன் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன கதையையே படித்து விழிகள் அகன்று வியந்து கொண்டிருந்த நம் மக்களுக்கு நம் நாடு கொஞ்சமும் சளைத்ததல்ல! இன்னும் சொல்லப் போனால் அதையும் தாண்டி அறிவாளிகளை போற்றும் நாடு பாரத நாடு என்று செய்தியை உலகுக்கு சொன்னது வாஜ்பாய் அரசு.!!
இது தான் பேச்சில் இல்லாமல் செயலில் நம் உயரத்தை உலகுக்கு உணர்த்துவது !!
டாக்டர். அப்துல் கலாமின் வாழ்க்கை இன்று எல்லோருக்கும் கிட்டதட்ட தெரிந்ததே ! மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தன் இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கையினால் மட்டுமே உழைத்து முன்னுக்கு வந்தவர் என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அதனால் அவர் மறைமுகமாக சொன்ன செய்தி என்ன?
ஏழ்மை என்பது ஒரு மாறக்கூடிய மாற்ற கூடிய நிலை!
சிறுபான்மையினர் என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் சொல்லப் படுவது. அது உன் முன்னேற்றத்தை என்றைக்கும் தடை செய்யாது. சிறுபான்மை என்பது தடைகல்லும் அல்ல! தாமாக உன்னை தூக்கி விடும் படிக்கட்டும் அல்ல!
நீ சிறுபான்மையினம் என்று பட்டயத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு அதன் நிழலில் அதன் மூலம் கிடைக்கும் கழிவீரக்கத்தில் வாழாதே !
வானம் எப்படி பறந்துபட்டதோ அது போல உன் எல்லைகளும் பெரிது.
அதனால்தான் அவர் அடிக்கடி
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் …
உள்ளத்து அனையது உயர்வு.
உன் உயரம் வளர்ச்சி உன் கையில். !
உன் உழைப்பும் நேர்மையும் சரியாக இருந்தால் நீ தெரிவு செய்த பாதையில் செல்ல எந்த தடையும் இந்த நாட்டில் இல்லை ! உனக்கு பெரிய அரசியல் பின்பலம் வேண்டாம். பெரிய குடும்ப பாரம்பரிய பெருமைகள் வேண்டாம். உன் அறிவு, திறமை, நேர்மை போதும்.
அது உன்னை உயர்த்தியே தீரும்.
இதைத்தான் அவர் சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் பெரும் செய்தியாக சொன்னார்.
இதை இன்று ஒவ்வொரு இஸ்லாமியரும் கிறிஸ்துவரும் சீக்கியரும் இன்ன பிற சிறுபான்மையினரும் நினைவுறுதல் வேண்டும்.
இது தான் நேர்மறை செய்தி ! இதுதான் அவரது வாழ்நாள் செய்தி!
இப்படி தன் வாழ்க்கையையே உதாரண செய்தியாக்கி வாழ்ந்த டாகர். அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கி பெருமை படுத்தி தான் பெருமை அடைந்தது இந்த நாடு !!
இன்று அவர் மறைந்த நாள் ! ஆனால் அவரது காட்டிய பாதை
நித்தியமானது. சத்தியமானது.!