பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி!

பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி!

Share it if you like it

நம் பாரத நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கியவரும், சமூக சீர்திருத்தத்திற்காக போராடியவருமான டாக்டர் பீம் ராவ் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் வரும் ஏப்ரல் 14-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நாட்டின் சட்ட மேதையான அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு உச்ச நீதிமன்றம் அன்றையதினம் விடுமுறை அறிவித்துள்ளது.

பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் மோவ்வில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் பிறந்தார். அவரது பெற்றோரான ராணுவ சுபேதார் ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய் சக்பால் ஆகியோருக்கு பதினான்காவது குழந்தை இவர். டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு தடைகளையும் திறமை மற்றும் மன உறுதியுடன் கடக்க முடியும் என்பதற்கு டாக்டர் அம்பேத்கர் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

அம்பேத்கரின் குடும்பம் பட்டியலினத்தை சேர்ந்த மஹர் சாதியை சேர்ந்தது. இதனால் அவர் குழந்தை பருவம் முதல் பல அவமானங்களை சந்தித்தார். பள்ளியில் உயர்சாதி மாணவர்கள் மற்றும் பட்டியலின மாணவர்கள் தனித்தனியாக அமரவைக்கப்பட்டனர். மேலும் பட்டியலின குழந்தைகளின் கல்வியில் ஆசிரியர்கள் பெரிதாக அக்கறை செலுத்தவில்லை. தாகமெடுத்தால் அங்குள்ள குவளையில் இருந்து தண்ணீர் குடிக்க கூட அம்பேத்கருக்கும் சக பட்டியலின மாணவர்களுக்கும் அனுமதியில்லை. பள்ளி பியூன் வந்து தண்ணீரை உயரத்தில் இருந்து ஊற்றினால் மட்டுமே அவர்களால் தண்ணீர் குடிக்க முடியும்.

இப்படி பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் அம்பேத்கர் வைராக்கியமாக படித்து 1907 இல், வெற்றிகரமாக தனது மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அடுத்த ஆண்டில் அவர் பம்பாய் பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். இதன்மூலம் அவரது மஹர் சாதியிலிருந்து கல்லூரிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமையை அம்பேத்கர் பெற்றார். நான்கு வருடங்கள் கழித்து பம்பாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற அம்பேத்கருக்கு பரோடாவில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த சமயம் அவரது தந்தை காலமாக அவரது குடும்பம் மோசமான நேரத்தைச் சந்தித்தது. இருந்தாலும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்பை ஏற்க அம்பேத்கர் முடிவு செய்தார். அதற்காக அவருக்கு பரோடா மகாராஜா உதவித்தொகை வழங்கினார்.

அம்பேத்கர் 1913 முதல் 1917 வரையிலும், மீண்டும் 1920 முதல் 1923 வரையிலும் வெளிநாட்டில் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் ஒரு சிறந்த அறிவுஜீவியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1917 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வறிக்கை பின்னர் “பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் பரிணாமம்” என்ற தலைப்பில் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. பின்னர் 1923ம் ஆண்டு லண்டன் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் டி.எஸ்.சி பட்டம் பெற்றார். ஏப்ரல் 1923 இல் அவர் இந்தியாவுக்குத் திரும்பிய நேரத்தில், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பட்டியலின மக்களின் சார்பாக தீண்டாமை நடைமுறைக்கு எதிராகப் போராடத் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டார்.

இதற்கிடையில் அம்பேத்கர் தன் குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக பல பணிகளை செய்ய துவங்கினார். ஆரம்பத்தில் அம்பேத்கர் பரோடாவில் ராணுவ செயலாளராக பணியாற்றினார். ஆனால் தன் கல்வியை தொடர்வதற்காக பணியில் இருந்து விலகினார். பின்னர் ஆசியராக, கணக்காளராக பணியாற்றினார். மேலும் முதலீடு ஆலோசகராக ஒரு வணிக நிறுவனத்தை தொடர்ந்தார். ஆனால் அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்த அவரது வாடிக்கையாளர்கள் அவரை விட்டு விலகியதால் அம்பேத்கரின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

1918ம் ஆண்டு அம்பேத்கர் பம்பாயில் உள்ள சிண்டென்ஹாம் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்தார். மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றாலும் அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் சக பேராசிரியர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர். வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு அம்பேத்கர் ஒரு வழக்கறிஞராக பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற துவங்கினார். அப்போது பட்டியலின மக்களுக்காக பல வழக்குகளை வாதாடினார். பட்டியலின குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாடுபட்டார். அவர்களின் நலனுக்காக பஹிஷ்கிப்ருத ஹிதகாரிணி சபாவை தொடங்கினார். மேலும் பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க மூக் நாயக், பஹிஷ்கிருத் பாரத் மற்றும் சமத்துவ ஜந்தா போன்ற பத்திரிகைகளை துவங்கினார்.

ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வந்த டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர், 1927ம் ஆண்டு ஜாதி ஒழிப்புக்காக தீவிர இயக்கங்களைத் தொடங்க முடிவு செய்தார். பட்டியலின மக்கள் பொது நீர்நிலைகளை பயன்படுத்துவதற்கும் கோவில்களில் சென்று வழிப்பாடு நடத்துவதற்காகவும் பல பேரணிகளையும் போராட்டங்களையும் நடத்தினார். இதற்கிடையில், இந்தியாவில் அரசியல் சூழ்நிலையில் மாற்றங்கள் உருவானது. நாட்டில் சுதந்திரப் போராட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. அம்பேத்கர் ஒருபுறம் தீவிர தேசபக்தராக இருந்தாலும், மறுபுறம் பட்டியலினத்தவர், பெண்கள் மற்றும் ஏழைகளின் பாதுகாவலராக இருந்தார். அவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடினார்.

இந்த சூழ்நிலையில், ஆங்கிலேய அதிகாரியான ராம்சே மெக்டொனால்ட் ‘கம்யூனல் விருது’ என்ற நடைமுறையை அறிவித்தார், இதன் விளைவாக பட்டியலினத்தவர் உட்பட பல சமூகங்களில் தனித் தேர்தல்களுக்கான உரிமை வழங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒருபகுதியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை முறியடிக்க காந்தியடிகள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதை தொடர்ந்து 1932ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி காந்திஜி மற்றும் அம்பேத்கர் இடையே ஒரு ஒப்பந்தம் உருவானது. இதுவே புகழ்பெற்ற பூனா ஒப்பந்தமாக மாறியது.

இந்த ஒப்பந்தத்தின்படி, தேர்தல் தொகுதிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு கூடுதலாக, அரசு வேலைகள் மற்றும் சட்டமன்றங்களில் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனி வாக்காளர் தொகுதி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நாட்டின் அரசியல் களத்தில் பட்டியலினத்தவருக்கு தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை உருவாக்கியது. அவர்களுக்கு கல்வி மற்றும் அரசுப் பணிக்கான வாய்ப்புகளைத் திறந்து விட்டதோடு, அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையையும் அளித்தது. டாக்டர். அம்பேத்கர் லண்டனில் நடந்த மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டு ஒவ்வொரு முறையும் தனது கருத்தை வலுக்கட்டாயமாக முன்வைத்தார். பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், முடிந்தவரை அரசியல் அதிகாரத்தைப் பெறவும் அவர் அறிவுறுத்தினார்.

சில ஆண்டுகளுக்கு பிறகு டாக்டர் அம்பேத்கர், சுதந்திர தொழிலாளர் என்ற தனிக்கட்சியை துவங்கினார். பம்பாய் மாகாணத் தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்த நாட்களில் அவர் ‘ஜாகிர்தாரி’ முறையை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு வேலைநிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தார். மேலும் பம்பாய் பிரசிடென்சியில் ஏராளமான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் உரையாற்றினார். 1939 இல், இரண்டாம் உலகப் போரின் போது, நாசிசத்தை தோற்கடிக்க இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர அழைப்பு விடுத்தார். 1947ம் ஆண்டு, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, வங்காளத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கருக்கு, சட்ட அமைச்சராக பொறுப்பு வழங்கினார். ஆனால் டாக்டர் அம்பேத்கர் இந்து சட்ட மசோதா தொடர்பாக அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தன் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை ஒரு குழுவிடம் ஒப்படைத்தது. டாக்டர் அம்பேத்கர் இந்த வரைவுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தபோது, இந்தியா பல நெருக்கடிகளைச் சந்தித்தது. நாடு பிரிவினையை கண்டது, மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். 1948 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் வரைவை பூர்த்தி செய்து அரசியலமைப்பு சபையில் வழங்கினார். நவம்பர் 1949 இல், இந்த வரைவு மிகக் குறைந்த திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதியை உறுதிப்படுத்த அரசியலமைப்பில் பல விதிகள் உருவாக்கப்பட்டன. அரசியலமைப்பில் அனைத்து குடிமக்களுக்கும் கண்ணியம், ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு அவர் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தார். சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் என அனைத்து துறைகளிலும் அம்பேத்கர் ஜனநாயகத்தை ஆதரித்தார். அவரைப் பொறுத்தவரை, சமூக நீதி என்பது அதிகபட்ச மக்களுக்கு அதிகபட்ச மகிழ்ச்சியைக் குறிக்கிறது என நம்பினார்.

சாதி வேறுபாடுகளை கொண்ட இந்து மதத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத அம்பேத்கர் மே 24, 1956 அன்று, புத்த ஜெயந்தியின் போது, பம்பாயில், புத்த மதத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். பின்னர் அதே வருடம் அக்டோபர் 14ம் தேதி அவர் பல சீடர்களுடன் புத்த மதத்தைத் தழுவினார். அதே ஆண்டு அவர் ‘புத்தரும் அவரது தர்மமும்’ என்ற தனது கடைசி நூலை எழுதி முடித்தார். சமூகத்தில் சமுத்துவம் மலர தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பாபா சாகேப் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக டில்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். புத்தமத சடங்குகள் படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

டாக்டர் அம்பேத்கரின் தேசபக்தி பட்டியலினத்தவர் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்தில் தொடங்கியது. அவர்களின் சமத்துவத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடினார். அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் சுதந்திரத்தை விரும்பினார். அவரைப் பொறுத்தவரை, சமத்துவம் இல்லாத சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் இல்லாத சமத்துவம் முழுமையான சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என நம்பினார். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, முழுமையான, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, முற்போக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.


Share it if you like it