வெளிநாட்டில் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் போன தமிழக மாணவர்கள் மீண்டும் மருத்துவ படிப்பை தொடர வேண்டி மத்திய அமைச்சரிடம் கோரிக்கையை முன்வைத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்.
சீனாவில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக, தமிழக மாணவர்கள் அந்நாட்டில் தங்களது மருத்துவ படிப்பினை தொடர முடியவில்லை. இதன்காரணமாக, அவர்கள் இந்தியா திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர்கள் தங்களது மருத்துவ பயிற்சியை (Internship) தொடர வேண்டி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை அணுகி இருக்கின்றனர். ஆனால், அதற்குரிய தீர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதேபோல, ரஷ்யா – உக்ரைன் இடையே மிக தீவிரமாக போர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உக்ரைனில் மருத்துவ படிப்பை மேலும் தொடர முடியாமல் போன தமிழக மாணவர்களின் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
இதையடுத்து, அம்மாணவர்கள் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசனை அணுகி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, அவர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை மாணவர்களுடன் சென்று டெல்லியில் சந்தித்து இருக்கிறார். இதையடுத்து, வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மாணவர்களுக்கு 2 வருட பயிற்சி அளிக்க மறுக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி இருக்கிறார். இதற்கு, உரிய தீர்வினை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற மனுவினையும் அவர் மத்திய அமைச்சரிடம் வழங்கியுள்ளார்.
தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தி.மு.க. எம்.பி.க்கள் முன்வந்து செய்ய வேண்டியதை தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன் மாணவர்களுடன் சென்று மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த செயல் பாராட்டுக்குறியது என சமூக ஆர்வலர்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மாணவர்களின் பெற்றோர்கள் பா.ஜ.க.வின் இந்த முயற்சிக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.