கடந்த சில நாட்களுக்கு முன் தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, மற்றும் கூட்டாளிகள் நான்கு பேர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனை அடுத்து மதுரைக்கு மார்ச் 1 அதிகாலை வந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய நபரிடமிருந்து மத்திய வருவாய் பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் சில இளைஞர்கள் போதையில் நடுரோட்டில் விழுந்து கிடக்கும் காணொளிகளும் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. சமீப காலமாக போதைப்பொருள்கள் அதிக அளவில் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது. இதனை தடுப்பதற்கும் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்த கிரீஸ் என்ற பயணியிடம் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கிரீஸ் வைத்திருந்த பையில் சுமார் 3.5 கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. கொக்கைன் ரகத்தை சேர்ந்த இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.