வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் இணைப்பு

வாக்காளர் அடையாள அட்டை – ஆதார் இணைப்பு

Share it if you like it

வாக்காளர் அடையாள அட்டைஆதார் இணைப்பு

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவில், தேர்தல் என்பது அவசியமான ஒன்றாகும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பலரும் போட்டியிட்டு, அதிக வாக்கு பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப் படுவார்கள்.

1950 ஆம் ஆண்டு, “இந்திய தேர்தல் ஆணையம்” உருவாக்கப் பட்டது.  ஆணையம் உருவான நாளான, ஜனவரி 25 ஆம் தேதியை, “தேசிய வாக்காளர் தினம்” ஆக, இந்திய தேர்தல் ஆணையம் வருடம் தோறும் கொண்டாடி வருகின்றது. அந்த நாளில், தேர்தலில் வாக்கு செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த நிறைய நிகழ்ச்சிகளை, தேர்தல் ஆணையம் நடத்தும்.

தேர்தல் ஆணையத்தால் நடத்தப் படும் தேர்தல்கள்:

1. இந்திய ஜனாதிபதியை (President of India) தேர்ந்து எடுக்கும் தேர்தல்,

2. இந்திய துணை  ஜனாதிபதியை (Vice President of India) தேர்ந்து எடுக்கும் தேர்தல்,

3. மக்களவை (Loksabha MP) உறுப்பினர்களை தேர்ந்து எடுக்கும் தேர்தல்,

4. மாநிலங்களவை (Rajyasabha MP) உறுப்பினர்களை தேர்ந்து எடுக்கும் தேர்தல்,

5. மாநில சட்டப் பேரவை (MLA) உறுப்பினர்களை தேர்ந்து எடுக்கும் தேர்தல்,

6. சட்டமேலவை (MLC) இருக்கும் மாநிலங்களில், அதன் உறுப்பினர்களை தேர்ந்து எடுக்கும் தேர்தல்,

என பல்வேறு விதமான தேர்தல்களை, இந்திய தேர்தல் ஆணையம், தொடர்ந்து நடத்தி வருகின்றது.

மாநிலத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்கள்:

உள்ளாட்சித் தேர்தல்களை உள்ளடக்கிய பஞ்சாயத்துத் தேர்தல், மாநகராட்சித் தேர்தல் போன்ற தேர்தல்களை, அந்தந்த மாநில தேர்தல் ஆணையமே நடத்தும்.

வாக்காளர் பட்டியல்:

தேர்தல் ஆணையம், தேர்தல்  நடைபெறுவதற்கு முன்பாக, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும். வாக்காளர் பட்டியலில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களின் பெயரை சேர்க்க, வீடு மாறியவர்களின் முகவரியை மாற்ற, இறந்த வாக்காளர்களின் பெயரை நீக்க என, தேர்தல் சம்பந்தப் பட்ட பணிகள் அனைத்தையும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்.

தேர்தல் சட்டத் திருத்த மசோதா, 2021:

1. ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க, வழிவகை செய்யப் பட்டு உள்ளது.

2. 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள், தங்களது பெயர்களை பதிவு செய்ய, ஜனவரி 1 என ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப் பட்டு வந்தது. இனி அது, வருடத்திற்கு நான்கு முறையாக ஜனவரி – 1, ஏப்ரல் – 1, ஜூலை- 1, அக்டோபர் – 1, என மாற்றம் செய்யப் பட்டு உள்ளது.

3. பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள், தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று வாக்கு அளிக்க முடியாத சூழ்நிலையில், அவரின் வாக்கை அவரது மனைவி செலுத்த முடியும். ஆனால், பணியில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு பதிலாக, அவரது வாக்கை, அவரின் கணவர் செலுத்த, சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது. இத்தகைய நடைமுறை மாற்றப் பட்டு, இனி கணவர்களுக்கும், அந்த உரிமை அளிக்கப் பட்டு உள்ளது.

4. ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு வசதியாக, எந்த இடத்தையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய அதிகாரத்தை, தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இத்தகைய நான்கு தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள், தற்போது நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப் பட்டு உள்ளது.

ஏற்பட உள்ள நன்மைகள்:

  • பல்வேறு இடங்களில், ஒரே நபர்களின் பெயர்கள் இடம் பெறுவது, முற்றிலும் தடுக்கப் படும்.
  • போலி வாக்காளர்கள் அடையாளம் காணப் பட்டு, அவர்கள் நீக்கப் படுவார்கள்.

மசோதா கடந்து வந்த பாதை:

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த H.S. பிரம்மா அவர்கள், 2012 ஆம் ஆண்டு, ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு வழிமுறைகளை முன் மொழிந்தார். அவரைத் தொடர்ந்து, அதே யோசனையை ஆதார் முன்னாள் தலைவரான அஜய் பூஷன் பாண்டே வழி மொழிய, இதற்கான செயல்முறை  தொடங்கியது.

வெற்றிகரமாக செயல் படுத்திய மாநிலங்கள்:

இரண்டையும் இணைத்ததன் மூலமாக, தெலுங்கானாவில் 40 லட்சம் வாக்காளர்களும், ஆந்திராவில் 25 லட்சம் வாக்காளர்களும், 2015 ஆம் ஆண்டு, அடையாளம் காணப் பட்டு, நீக்கப் பட்டனர்.

ஆதரவு அளித்த எதிர் கட்சிகள்:

2018 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி, இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தியது. அதில், 7 தேசிய கட்சிகள், 34 மாநில கட்சிகள் கலந்து கொண்டு, தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். பின்னர் அது, பத்திரிகை அறிக்கையாக வெளியிடப் பட்டது. அனைத்து கட்சியும் ஒரு சேர, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதாக, செய்திகள் வெளியாகின.

மத்தியப் பிரதேச காங்கிரஸ்:

2018 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆதார் எண்ணையும் – வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதற்காக, மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்தல் ஆணையரைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர். சில தொகுதிகளில் 70,000 முதல் 80,000 வரை போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், இரண்டையும் இணைப்பதன் மூலமாக, போலி வாக்காளர்கள் கண்டறியப் பட்டு,  நீக்கப்பட ஏதுவாக இருக்கும், எனவே இரண்டையும் இணைக்க வேண்டும், என வலியுறுத்தினார்கள்.

தேசியவாத காங்கிரஸ்:

2019 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், மகாராஷ்டிரா சட்டமன்றப் பேரவை நடவடிக்கையின் போது, அன்றைய மகாராஷ்டிரா முதல்வரிடம், இரண்டையும் இணைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தி, கோரிக்கை வைத்தனர். அதை அன்றைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களும் உடனடியாக ஏற்றுக் கொண்டு, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். இதன் மூலமாக, போலி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், தெரிவிக்கப் பட்டது.

எவர் ஒருவரும், தான் சார்ந்து இருக்கும் எந்த ஒரு துறையிலும், வெற்றி பெறவே விரும்புவார். அதிலும் தேர்தல் என்றால், அந்த வெற்றி இன்னும் மகிழ்ச்சியாகவே இருக்கும். பல பேர் போட்டியிட்டு, கடும் போட்டிக்கு நடுவே, ஒரு தேர்தலில், ஒருவர் வெற்றி பெறுகிறார் எனில், அது நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதே, நமது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுவே ஜனநாயகத்தின் வெற்றியாகக் கருதப் படும்.

ஆனால் சிலர், தங்களது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியோ, பணத்தின் மூலமாகவோ, போலி வாக்காளர்கள் மூலம் வெற்றி பெற்றால், அது ஜனநாயகத்திற்கே, நீங்காத தழும்பாக அமைந்து விடும்.

நடந்து முடிந்த பல தேர்தல்களில், போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்ட நிகழ்வு, பத்திரிகைகளில் செய்தியாக, பலமுறை வெளி வந்து உள்ளது. அதுபோல், இனி நடக்காமல் இருக்க,  இந்த சட்டம் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இது போல சட்டங்களை ஆதரிப்பதே, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும். இதுவே, பலதரப்பட்ட மாநில மக்களின் எண்ணமாகவும் இருந்து வருகின்றது.

  • . ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

உதவிய தளங்கள்:

https://twitter.com/Shehzad_Ind/status/1473169467987279875/photo/2

https://timesofindia.indiatimes.com/india/madhya-pradesh-congress-asks-cec-to-link-aadhaar-with-voter-id-before-november-polls/articleshow/63702190.cms

https://timesofindia.indiatimes.com/city/mumbai/ncp-suggests-linking-voter-id-to-aadhaar-devendra-fadnavis-agrees/articleshow/70051596.cms


Share it if you like it