தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அடுத்த நெஞ்சுவலி அமைச்சர் பொன்முடிக்கா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
1996 – 2001 தி.மு.க. ஆட்சி காலத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இருந்து சமீபத்தில் பொன்முடி விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அமைச்சர் பொன்முடி வீட்டில் திடீர் சோதனையில் ஈடுப்டிருக்கிறார்கள். சென்னை சைதைப்பேட்டை ஸ்ரீநகர் காலனியிலுள்ள வீடு, விழுப்புரத்திலுள்ள பொன்முடி வீடு, பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கௌதம சிகாமணி வீடு உட்பட மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேசமயம், எதனடிப்படியில் இச்சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கெனவே, தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அன்றைய தினம் இரவு செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பதால், அடுத்த நெஞ்சுவலி அமைச்சர் பொன்முடிக்கா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி கிண்டல் செய்து வருகின்றனர்.