‘பிக்பாஸ்’ வி.சி.க. விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு…!

‘பிக்பாஸ்’ வி.சி.க. விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு…!

Share it if you like it

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தித் தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.

சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர் கிருபா முனுசாமி. தற்போது, மத்திய அரசு உதவியுடன் லண்டனில் சட்டத்துறையில் முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தில், “விக்ரமன் தன்னை காதலிப்பதாகக் கூறியதால், நானும் சம்மதித்தேன். நாங்கள் பழகிய இந்த 3 ஆண்டு காலத்தில் என்னை பலமுறை அவமானப்படுத்தி இருக்கிறார். என்னை மனைவியாக உணர வைத்து, பணம் செலவு செய்ய வைத்தார். என்னுடைய கிரெடிட் கார்டில் 80,000 ரூபாய் செலவு செய்தது பற்றி கேட்டபோது, ஜாதி ரீதியாக இழிவுபடுத்தினார். தலித் பெண்ணான என் வாழ்க்கையை கொச்சைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். இதுவரையிலும் 12 லட்சத்திற்கு மேல் பணம் பறித்துள்ளார். விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்து பல பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் கிருபா முனுசாமி. அப்பதிவில், விக்ரமுடனான உரையாடலுடன், ஸ்க்ரீன் ஷாட்களும் இடம்பெற்றுள்ளன. ட்விட்டரில் கிருபா முனுசாமி வெளியிட்டுள்ள பதிவில், ‘2013-ம் ஆண்டில் நான் விருந்தினராக பங்கேற்ற நிகழ்ச்சியில் விக்ரமனும் பங்கேற்றார். அதன் பிறகு ஆகஸ்ட் 2020-ல் நான் லண்டன் சென்றபோது தானாக முன்வந்து விமான நிலையத்தில் வழியனுப்பினார். பின்னர், 2 மாதங்கள் கழித்து அக்டோபர் மாதம் என்னிடம் பேசத் தொடங்கினார். 2 நாட்கள் கழித்து வி.சி.க. கட்சியில் தன்னை சேர நிர்வாகிகள் அழைத்ததாக சொன்னார். அவருடைய அரசியல் கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், அவரேதான் சென்று கட்சியில் இணைந்தார் என்பது தெரியவந்தது.

இதன் பிறகு, என்னிடம் அவர் செய்யும் அரசியல், பண மோசடி தொடர்பாக நான் கேள்வி கேட்டேன். இதனால் விக்ரமன் என்னை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். நான் அவரை விட்டு விலகும் நேரத்தில் எல்லாம், என்னிடம் கெஞ்சுவதோடு, இனி சரியாக நடப்பேன் என்று கூறுவார். ஆனால், அவரின் குணம் தொடர்ந்து மாறாமல் இருந்தது. 2 வருடமாக அவருடன் உறவில் இருந்த நான், விக்ரமனுக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்தினேன். அவர் திருப்பித் தருவதாக கூறிய பணத்தை கேட்டபோது என்னை பிளாக் செய்தார். 3 மாத முயற்சிக்குப் பின், அதாவது பிக்பாஸ் செல்வதற்கு முன்பு தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கேட்டார். அதன் பிறகு நாங்கள் ஒன்றாக இருந்தோம். பிக்பாஸ் முடிந்து எங்கள் காதல் தொடர்ந்தது.

மேலும், தன்னுடைய மேனேஜர் என்று சொல்லும் பெண்ணுடன் விக்ரமன் நெருக்கமாக இருந்தார். என்னை ஏமாற்றினார் என்பதை கண்டுபிடித்தேன். நான் கான்ப்ரன்ஸ் கால் செய்து நேரடியாக கேட்டபோது உண்மையை ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணுடன் விக்ரமன் காதலில் இருந்தது தெரியவந்தது. பின்னர், அவர் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்று கூறிய 15-க்கும் மேற்பட்டோரிடம் பேசினேன். அவர்களில் பலருக்கும் திருமணமாகிவிட்டது. அவர் மீது புகாரளிக்கப் போவதாகக் கூறவே, தனக்கு அரசியல் ரீதியாக பெரிய குழு உள்ளதாக விக்ரமன் என்னை மிரட்டினார். தொடர்ந்து, வி.சி.க. தலைவர் திருமாவளவனிடம் 20 பக்க புகார் கடிதம் அனுப்பினேன். அவர் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க சொன்னார். அப்போது, சில ஆதாரங்களை நான் சமர்ப்பித்தேன். அக்குழு சமர்ப்பித்ததாகக் கூறும் அறிக்கையின் நகல் எனக்கு கிடைக்கவில்லை’ என்று விக்ரமன் மீது புகார்களை அடுக்கி இருக்கிறார்.


Share it if you like it