இங்கிலாந்து புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கொரோனா விதிமுறைகளை மீறி பிரதமர் அலுவலகத்தில் மது விருந்து நடத்தினர். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு போரிஸ் ஜான்சன் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதில் 59 சதவிகித வாக்குகளைப் பெற்று போரிஸ் ஜான்சன் வெற்றிபெற்றார். ஆனால், போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சாஜித் ஜாவித் மற்றும் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து, மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, போரிஸ் ஜான்சனும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, இங்கிலாந்து பிரதமருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக நியமிக்கப்படுவார். ஆகவே, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமர் பதவி வகிக்க முடியும். ஆகவே, கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கியது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் ஆகியோருக்கிடையே போட்டி நிலவியது. ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த ரிஷி சுனக், திடீரென பின்தங்கினார். இறுதியில் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்றார். பின்னர், முறைப்படி இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தால் பிரதமராக நியமிக்கப்பட்டார். புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட இவரது அமைச்சரவையில்தான், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களை விட, பிற நாட்டினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேனும், அலோக் ஷர்மாவும் இடம்பெற்றிருக்கிறார்கள். 47 வயதாகும் சுயெல்லா பிரேவர்மேன், லண்டனிலயே பிறந்து வளர்ந்த பாரிஸ்டர். தென் கிழக்கு இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பிரிட்டன் போலீஸ் மற்றும் இடம்பெயர்வு பொறுப்புகள் பிரேவர்மேனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, 55 வயதான அலோக் ஷர்மா, ஆக்ராவில் பிறந்தவர். இவர் தற்போது பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டின் தலைவராக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடந்த மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டுகளை பெற்றவர். அலோக் ஷர்மா அரசியலில் நுழைவதற்கு முன்பு கார்ப்பரேட் துறையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.