செய்தியாளர்கள் மீது தி.மு.க. ரவுடி கும்பல் தாக்குதல்!

செய்தியாளர்கள் மீது தி.மு.க. ரவுடி கும்பல் தாக்குதல்!

Share it if you like it

ஈரோடு கிழக்குத் தொகுதியில் விதிமீறல்களில் ஈடுபடும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த ரவுடிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில், காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, தி.மு.க. தரப்பில் குக்கர், கொலுசு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. தவிர, தேர்தல் பிரசாரத்துக்கு வரும் நபர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் பேட்டாவும், 3 வேளை சாப்பாடும் தருகிறார்கள். தவிர, வாக்காளர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்று பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் டிக்கா என வெயிட்டாக கவனிக்கிறார்கள்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தையும், ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் நிலவரத்தையும் செய்தியாளர்கள் செய்தி சேகரித்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 21-ம் தேதி காலை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அப்பகுதி வாக்காளர்களை ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பதுபோல அடைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைக்கவே, நியூஸ் தமிழ் 24 தொலைக்காட்சியின் செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா ஆகியோர் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருக்கிறார்கள்.

மேற்கண்ட செய்தி நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவுடிகள், செய்தியாளர் ராஜேஷ்குமாரையும், ஒளிப்பதிவாளர் கருப்பையாவையும் செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தினர். இந்த காட்சிகளும் அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த மக்கள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் ரவுடித்தனத்தை கடுமையாக விமர்சித்தனர். மேலும், தி.மு.க.வின் இந்த அராஜக செயலை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதையும் கண்டித்து பதிவுகளை இட்டனர்.

இந்த நிலையில்தான், செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அம்மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றைய மோசமான தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டித்த நிலையில், 22-ம் தேதி காலை 10 மணியளவில் வீரப்பன் சத்திரம் அசோகபுரம் பகுதியில் வாக்குக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நியூஸ் தமிழ் 24 தலைமைச் செய்தியாளர் ராஜேஷ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் கருப்பையா ஆகியோர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல் நடத்தியதுடன் கேமராவையும் உடைத்திருக்கிறார்கள்.

செய்தியாளர் ராஜேஷ் கழுத்தில் காயத்துடனும், ஒளிப்பதிவாளர் கருப்பையா கைகளில் ரத்த காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். களத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். இனியாவது இந்த பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்திட தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. கட்சி பேதமின்றி சமுக விரோத கும்பல்கள் பத்திரிகையாளர்களை, ஊடகவியலாளர்களை தாக்கும் அவலம் தொடர்வது ஊடக சுதந்திரத்திற்கு பேராபத்து” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it