பயந்துட்டியா குமாரு… ஸ்டாலினை கலாய்த்த குஷ்பு!

பயந்துட்டியா குமாரு… ஸ்டாலினை கலாய்த்த குஷ்பு!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்த உத்தரவுக்கு எதிராக, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ்.ஸை கண்டு அவ்வளவு பயமா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு.

கடந்தாண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டிருந்தது. இப்பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை. ஆகவே, ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உள் அரங்கங்களில் பேரணியை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு முன்பு  மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை இரு நீதிபதிகள்  கொண்ட டிவிஷன் அமர்வு விசாரித்தது. அப்போது, பொது சாலைகளில் அணிவகுப்பு நடத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது. ஆகவே, உளவுத் தகவல்கள் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை மாநில அரசு தடை செய்ய முடியாது என்று தெரிவித்தது.

தவிர, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்தது. அதோடு, 3 தேதிகளை குறிப்பிட்டு பேரணிக்கு அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கும்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்டது. மேலும், மேற்கண்ட 3 தேதிகளில் ஒரு தேதியில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், தமிழக அரசின் மேல்முறையீட்டை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு. இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும் கூட, தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றமும் அனுமதியே வழங்கும். அதற்கான பாடத்தை தி.மு.க. கற்க வேண்டிய நிலை ஏற்படும். மீண்டும் மன்னிப்பு கேட்க தயாராக இருங்கள். ஆர்.எஸ்.எஸ்.ஸை பார்த்து தி.மு.க.வுக்கு பயமா? பட்டால்தான் புரியும். முதல்வர் ஸ்டாலின் அவர்களே.. எது உங்களை பயமுறுத்துகிறது?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Share it if you like it