தேர்தலில் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து கரெக்ட் பண்ணி விடலாம் என்று தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் டீல் பேசும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை தொடங்கி வைத்தது தி.மு.க.தான். அதாவது, மதுரை திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த ம.தி.மு.க.வைச் சேர்ந்த வீர.இளவரசன் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அத்தொகுதிக்கு 2009-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம், தி.மு.க. சார்பில் லதா அதியமான் ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது, தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காக கருணாநிதியின் மகன் அழகிரி, வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினார். இப்படி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை தி.மு.க. தொடங்கி வைத்ததால், அதற்கு திருமங்கலம் ஃபார்முலா என்று பெயர் வந்தது. இதன் பிறகு, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா., கடந்த 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க. வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து, தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா கடந்த 25-ம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி, எ.வ.வேலு மற்றும் வேட்பாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில்தான், வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து செட் பண்ணி விடலாம் என்று கே.என்.நேரு, வேட்பாளர் இளங்கோவனிடம் சொல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில், கே.என்.நேருவிடம் இளங்கோவன் ஏதோ சொல்ல, “அவன் என்னத்து அவன் தண்டம். மந்திரி எல்லாம் தேவை இல்லை. மாவட்ட நிர்வாகிகள் எல்லாரும் வந்துடுங்கன்னு நேத்தே சொல்லிட்டேன், எல்லா மாவட்டத் தலைவரையும் கூப்பிட்டு நீ காசு பணம் எல்லாம் குடுக்கணும்னு சொல்லிட்டேன். பிளாட்டினம் மகால்ல மதியம் எல்லாரையும் கூப்பிட்டு பணத்தை குடுத்து செட்டி பண்ணி, 30, 31, 1-ம் தேதிக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிடணும். இதுக்காக 31 பூத்லயும் 10,000 பேர ரெடி பண்ணனும். நாளைக்கு தலைவர் ஸ்டாலினே அதிகாரிகளுக்கு வாட்ச், பிரியாணி தரப்போறாரு” என்று சொல்கிறார்.
இதன் மூலம் தி.மு.க. தரப்பில் வாக்காளர்களுக்கு 5,000 ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்போவது உறுதியாகி இருக்கிறது. இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு இன்னொரு பொங்கல் பண்டிகைதான். தற்போது இந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு தி.மு.க. மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும். தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.