இடைத்தேர்தலில் தி.மு.க.வின் பணப்பட்டுவாடா அம்பலம்: நிர்வாகி காரிலிருந்து கட்டுக்கட்டாக டோக்கன் பறிமுதல்!

இடைத்தேர்தலில் தி.மு.க.வின் பணப்பட்டுவாடா அம்பலம்: நிர்வாகி காரிலிருந்து கட்டுக்கட்டாக டோக்கன் பறிமுதல்!

Share it if you like it

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், அக்கட்சி நிர்வாகியின் காரில் இருந்து பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா., திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 27-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இத்தொகுதிக்கான தேர்தல் பணிமனை திறக்கப்பட்டபோது, தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது அனைவரும் அறிந்ததே. இதை மெய்ப்பிக்கும் வகையில், பிரசாரத்துக்கு வருபவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தி.மு.க.வினர் பணம் விநியோகம் செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்த நிலையில்தான், தி.மு.க. நிர்வாகியின் காரில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் டோக்கன்கள் கட்டுக்கட்டாக தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்து வரப்படும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கிவிட்டு, பிரசாரம் முடிந்ததும் அந்த டோக்கனை வாங்கிக் கொண்டு பணம் பட்டுவாடா செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள் தி.மு.க.வினர். அந்தவகையில், ஈரோடு கருங்கல்பாளையத்துக்குட்பட்ட கிருஷ்ணம்பாளையம் பகுதியில் இந்த பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது.

இந்த விவகாரம் யார் மூலமோ, மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணிக்கு தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு கலெக்டர் தகவல் அளித்தார். இதையடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பூர் மாவட்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளர் சர்புதீன் என்பவரின் கார் வந்திருக்கிறது. இக்காரை அதிகாரிகள் நிறுத்திசோதனை செய்திருக்கிறார்கள். அப்போது, காரில் பணம் விநியோகம் செய்யும் டோக்கன்கள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பணம் விநியோகம் செய்யும் டோக்கன்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், தி.மு.க. நிர்வாகி சர்புதீனிடமும் விசாரணை நடத்தினர். தி.மு.க. நிர்வாகியின் காரில் இருந்து பணம் பட்டுவாடா செய்யும் டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடேயை, மேற்கண்ட செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களில் தீயாக பரவியது. இதையடுத்து, எதிர்க்கட்சியினர் இச்செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.


Share it if you like it