ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தி.மு.க. கவுன்சிலர் அராஜகம்!

ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: தி.மு.க. கவுன்சிலர் அராஜகம்!

Share it if you like it

தொழில் போட்டியில் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ளது நசியனூர் பேரூராட்சி. இப்பேரூராட்சியின் 1-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கோவேந்திரன். இந்த சூழலில், நசியனூரில் கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுனன், கீதாராணி தம்பதி ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இதே பகுதியில் கோவேந்திரனும் ஹோட்டல் நடத்தி வருகிறார். இதில், அர்ஜூனன் கடைக்கு அதிகளவில் ஆட்கள் வந்து சாப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே, அர்ஜுனன் தம்பதியினரை ஹோட்டலை காலி செய்யுமாறு கோவேந்திரன் கூறிவந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, அத்தம்பதியினர் மறுத்து விட்டனர். இதனால், இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அர்ஜுனன் தம்பதியினர் வழக்கம்போல் ஹோட்டலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். இந்த சூழலில், இன்று அதிகாலை அர்ஜுனன் தம்பதியினரின் ஹோட்டல் முன்பு ஒரு கார் வந்து நின்றது. அக்காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் ஹோட்டலின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டார். அப்போது, பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்து ஹோட்டல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சித்தோடு போலீஸாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். எனினும், கடையின் முன் பகுதியில் இருந்த 2 பிரிட்ஜ்கள், மேற்கூரை ஆகியவை எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் விசாரணை நடத்தினார். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து, கடையின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, இன்று அதிகாலை காரில் இருந்து இறங்கி வந்த மர்ம நபர் ஒருவர் ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டை வீசியது பதிவாகி இருந்தது. இதனடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். தொழில் போட்டியில் தி.மு.க. கவுன்சிலரே பெட்ரோல் குண்டு வீசிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it