நூலக இயக்கத்தின் தந்தை – சியாலி ராமாமிர்தம் ரங்கநாதன்

நூலக இயக்கத்தின் தந்தை – சியாலி ராமாமிர்தம் ரங்கநாதன்

Share it if you like it

நூலக இயக்கத்தின் தந்தை. நூலக இயலுக்கு வடிவமைப்பு வழங்கியவர், நூலகத்துறையில் விடிவெள்ளியாகப் பிரகாசித்தார் ரங்கநாதன்.
அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக புத்தகப் பசியை மக்களிடம் தூண்டிய இவர் சீர்காழியில் இராமாமிர்தமய்யர் சீதாலட்சுமி தம்பதிகளின் மகனாக 12ம் தேதி ஆகஸ்ட் 1892ல் பிறந்தார்.

ரங்கநாதனுக்கு ஆறு வயதானபோது அவருடைய தந்தையார் மறைந்து விடவே, “தந்தையோடு கல்வி போம்” என்ற சூழ்நிலை ஏற்படாது இருக்க வேண்டும் எனக்கருதிய தாய், இவரை அழைத்துக் கொண்டு சீர்காழியில் இருக்கும் அவரது சகோதரர் வீட்டிற்குச் சென்றார்.
அவர் ஒரு பள்ளி ஆசிரியர். அவர் வீட்டில் இருந்தே ரங்கநாதன் பள்ளிக் கல்வியைத் தொடங்கினார். 1897 முதல் 1908 வரை சீர்காழியில் உள்ள சுப்பிரமணிய முதலியார் இந்து உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

படிப்பில் ஆர்வமிகுந்து விளங்கிய ரங்கநாதனுக்கு தன் தாய்மாமா போலவே ஆசிரியராக வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அப்போது அவருடைய உடல் குன்றியிருந்தது, ஆனாலும் மனம் வலிமையாகவே இருந்தது.
மூலநோயும் ரத்தசோகையும் அவரை வாட்டியதால் நீண்ட நேரம் உட்கார்ந்து படிக்கமுடியாது. ஆயினும் தன்னுடைய நண்பரை உரக்கச் படிக்கச் சொல்லிக் கேட்டார். 1909ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார்.

மெட்ரிகுலேஷன் தேர்வு முடிந்து, மேற்கல்வி பெறுவதற்காக சென்னை 1909-இல் ரங்கநாதன் குடியேறி, இடை நிலைக் கல்வியான இன்டர்மீடியட் படிப்பில் ஆங்கிலம், சமஸ்கிருதம், கணக்கு, இயற்பியல் முதலியன படித்து 1911 ஏப்ரலில் முதல் வகுப்பில் தேறினார்.

மேற்கொண்டு எம்.ஏ. படிப்பதற்கு அவருடைய குடும்பசூழல், வருமானம் இல்லாமை காரணமாக வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.
1913 ஜூன் மாதம் விளையும் பயிரை முளையிலேயே அறிந்தவர் ஆசிரியர் இராசு. ரங்கநாதனை வேலைக்கு செல்ல வேண்டாம் எம்.ஏ. படிக்க அறிவுறுத்தி அதற்குத் தேவையான பண உதவிகளைத் தாம் செய்கிறேன் என்று கூறி அவர் படிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

கணக்குப் படிக்கும் மாணவர்களுக்குத் தனியாக பாடம் சொல்லிக் கொடுத்து அதில்வரும் பணத்தை செலவுகளுக்கு வழி செய்து கொண்டார்.
வேலைக்கு செல்லாமல் மேற்கொண்டு படிப்பைத் தொடர வேண்டும் என்று விரும்பிய அந்த ஆசிரியருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பின்னாளில் இங்கிலாந்து நூலகராக பயிற்சி பெற்று திரும்பிய பிறகு, அதில் கிடைத்த சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து நன்றிக் கடனைச் செலுத்தும் வகையில் ஆசிரியருடைய நினைவாக ராசு அறக்கட்டளை என்ற ஓர் அறக்கட்டளை நிறுவினார் அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்தார்.

பேராசிரியர் ரங்கநாதன் ஒரு கணித ஆசிரியர், நூலகத்தில் பணியாற்ற எந்த வித படிப்போ, பயிற்சியோ பெற்றதில்லை. அந்தக் காலத்தில் நூலகர் பயிற்சிக்கு சரியான இடமும் கிடையாது.

ரங்கநாதனை நூலகராக நியமிக்கும் போதே அவரை இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா சென்று நூலகப் படிப்பு படிப்பதுடன் அங்குள்ள நூலகங்களில் பயிற்சி பெறவேண்டுமென்ற ஒரு நிபந்தனையும் விதித்தனர். அதற்கான செலவுகள் அனைத்தையும் சென்னை பல்கலைக்கழகமே ஏற்க முன் வந்தது.
1924 செப்டம்பர் மாதத்தில் ரங்கநாதன் லண்டன் பயணமானார்.

நூலக பள்ளியில் படித்தபோது அவர் பல்வேறு நூலகங்களுக்கு நேரில் சென்று பணியாற்றி பயிற்சிபெறும் வகையில் பேராசிரியர் வகுப்புகளை மாற்றி அமைத்துக் கொடுத்தனர். வாரத்தில் இரண்டு நாள் முழுவதும் வகுப்பறை, படிப்பு, மீதி நாட்களில் நூலகப் பணி.
இது ரங்கநாதனுக்கு மிகவும் பிடித்துப் போனது, வகுப்புக்கு சென்றாலே போதும், நூலகங்களில் பயிற்சி பெறுவது கட்டாயமில்லை, கடல் கடந்து வந்து காலத்தை வீணாக்க விரும்பாத அவர், வாரத்தில் ஏழு நாட்கள் அவர் கடுமையாக உழைத்தார்.

பல்கலைக்கழகத் தேர்வில் சிறப்பாக தேர்வு பெற்றார், நூலகர் பயிற்சிக்கு ரங்கநாதன் சென்றாலும், அவருக்கு பயிற்சி அளிக்க எந்த பல்கலைக்கழக நூலகமும் சிறப்பாக இல்லை. படிக்க வேண்டிய நூலகவியல் புத்தகங்களை படித்து முடித்துவிட்டு நூலகவியல் இதழ்களில் வந்த கட்டுரைகளையும் படித்து விடவே, நேரடி பயிற்சியை அப்போது லண்டனில் வளர்ந்து வந்த பொது நூலகத் திட்டத்தின் கீழ் இயங்கி வந்த பொதுநூலகங்களில் பயிற்சி பெறவிரும்பி அங்குள்ள பொது நூலகம் மற்றும் கிளை நூலகம் அனைத்திலும் அவர் சென்று பணியாற்றினார். பொது நூலகத் திட்டத்தின் மீது அவருக்கு பெரும் நாட்டம் ஏற்பட்டது.
அதைப்போல சென்னை மாநிலத்தில் பொதுநூலகத்திட்டம் உருவாக்கும் முயற்சியில் அப்போது திட்டமிட்டார்.

பொது நூலகத் திட்டத்தின் மேலிருந்த ஈடுபாட்டினால் அதன் தொடர்புடைய மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டார்.
இதற்கிடையே ஆண்ட்ரூ கார்னிகி என்ற அமெரிக்க கோடீஸ்வரன் மறைந்த போது, அவரது சொத்துகள் முழுவதும் அமெரிக்கா பிரிட்டிஷ் தீவுகளில் பொது நூலகங்களை அமைத்து அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு இரு நாடுகளிலும் பொது நூலகங்களும், கிளைநூலகங்களும்,கிராமபகுதியில் திறக்கப்பட்டன. இந்த நூலகங்களின் பணியாற்றும் நூலகருக்கு பயிற்சி அளிக்க அவ்வப்போது மாநாடும் கருத்தரங்குகளும் நடைபெற்றன.
அத்தகைய கிராமப்புற நூலக வளர்ச்சி மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளச் சென்ற பேராசிரியர் செபர்ஸ் என்பவர் ரங்கநாதனையும் கூட அழைத்துச் சென்றார்.

மாநாட்டிற்கு கலந்து கொள்ள அங்கு வந்திருந்த கார்னீகி அறநிலையத்தை சார்ந்த முக்கியமானவர்களையும், புகழ் பெற்ற நூலகர்களையும் அறிமுகம் செய்து கொண்டதால் பின்னால் அந்த நூலகங்களுக்கு சென்று வந்தது ரங்கநாதனுக்கு பெரும் வசதியாகவும் உபயோகமாகவும் அமைந்தது.
தமிழகத்திற்கு திரும்பிய பின் சென்னை பொது நூலகச் சட்டத்தைத் தயாரிப்பதற்கு இந்த அனுபவங்கள் அவருக்கு பெரிதும் பயன்பட்டன.
பல நூலகங்கள் சென்று பணியாற்றிய அனுபவங்கள் தமிழ்நாட்டிற்கு வந்ததும் அவரின் நூலகப் பணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தன. 1925 ஜூன் மாதம் சென்னை பல்கலைக்கழக நூலகத்திற்கென்று தனியாக கட்டடம் அமைக்கும் திட்டத்தை அவரிடம் ஒப்படைத்தது.

அங்கு கோலன் பகுப்பு முறை 1925ல் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் பல்வேறு கூறுகளை துல்லியமாகச் சொல்லும் சந்கேத குறியீட்டு முறையை அவர் உருவாக்கினார்.
அதற்கு கோலன் பகுப்பு முறை என்று அழைக்கப்படும், ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எந்த சிரமமும் இல்லாமல் மிகத் துல்லியமாக எடுப்பதற்கு இந்த கோலன் பகுப்பு முறை இன்றளவும் மிகவும் உதவியாக விளங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் எங்கோ ஒரு சிற்றூரில் பிறந்து எளிமையாக வாழ்ந்து படிப்படியாக படித்து ஆசிரியராகி, நூலகர் ஆகி உலகம் முழுவதும் போற்றக் கூடிய வகையில் பல புதுமைகளை புகுத்தி பகுப்புகளை செய்தவர். எஸ்.ஆர். ரங்கநாதன் நூலக வியலின் முன்னோடி.
வரலாற்றுச் செய்திகள் அனைத்தும் புத்தகங்களாக பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் சமுதாயத்தில் வளர பாடுபட்டார்.
அதன் பயனாக நூல்கள் உருவாகி மனித நாகரிகத்தின் முக்கிய அம்சமாக நடைபெற்றதையும் விவரிக்கின்றன.
இவைகள் அனைத்தும் அரசர்களின் அரண்மனைகளிலும் கோயில்களிலும் அடைபட்டுக் கிடந்தனவே தவிர, எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் உருவாகவில்லை.

சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட அவை பாதாள இருட்டு அறைக்குள் இருந்த நூல் நிலையங்களை வெளியே கொண்டு வந்த பெருமைக்குரிய ரங்கநாத சகாப்தம் 1924ல் ஆரம்பமாயிற்று.
1924ம் ஆண்டு சென்னை பல்கலைக் கழக நூலகராக இவர் நியமிக்கப்பட்ட போது அது இவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, நூலகத் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

சொல்லப்போனால் நம் நாட்டுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமான நூலக மறுமலர்ச்சிக்கு வித்திட்டது என்றே சொல்லலாம்.
மனிதர்களுடைய மனங்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவது அவர்கள் வாசிக்கும் புத்தகங்களே, மகாத்மா காந்தி,கார்ல் மார்க்ஸ், ரூசோ, வால்டேர் போன்றவர்களின் எழுத்துக்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தின.

சில புத்தகங்கள் ஆராய்ச்சிகளுக்கும், அதன் கண்டுபிடிப்புகளுக்கும் பலவித வழிகாட்டியாக அமைந்துள்ளது.சாகா வரம் பெற்ற நூல்களால் எத்தனையோ மனிதர்களின் குணங்களை மாற்றி அமைத்திருக்கின்றன.

அச்சு, காட்சி, சமூக ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்ட இன்றைய உலகில் இவற்றைத் தாண்டி உருப்படியான நூல்களின் வாசிப்பு என்பதே இளைய தலைமுறையிடம் அபூர்வமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், நூலகத்தை இயக்கமாகவே கண்டவர் எஸ்.ஆர். ரங்கநாதன். இந்தியாவில் பெருமளவில் நூலக இயக்கம் முறையாக வளரவும், ஒரு துறையாக நூலக இயல் உருவாகவும் காரணமாக இருந்து ‘இந்திய நூலகத் தந்தை’ என்று எல்லோராலும் பாராட்டப் பெறுபவர் சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் இந்திய நூலகராக விளங்கியவர் சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்.

இவைகளையெல்லாம் மனதினில் உள் வாங்கிக்கொண்டு நூலகங்கள் சீரான இயக்கத்திற்கு ரங்கநாதன் ஐந்து விதிகளை உருவாக்கினார்.

புத்தகங்களை பயன்படுத்துவதற்கும்
ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு புத்தகம்
ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு வாசகர்
வாசகரின்நேரத்தை பாதுகாத்தல்
நூலகம் ஒரு வளரும் அமைப்பு

போன்ற விதிகள் உலகளாவிய முறையில் இன்றளவும் நூலகங்களில் கடைப்பிடித்து வருகிறது.
1972 செப்டம்பர் 27ம் தேதி மறைந்தார்.

நூலகவியலுக்குச் இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. ஆக. 12, அவருடைய 128-வது பிறந்த நாள். இவர் பிறந்த நாளை இந்தியா முழுவதும் தேசிய நூலக தினமாகக் கொண்டாடி வருகின்றனர். ஒரு கைதேர்ந்த சிற்பியின் கற்பனை வளத்தோடும் கைவண்ணம், கலைநயத்தோடும் நூலகத் துறையைச் செதுக்கிய மகா சிற்பி எஸ்.ஆர். ரங்கநாதன்.

இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள கிராமங்களிலும் நூலகம் அமைய வேண்டும் என்று அரும்பாடுபட்டவர்.
அவருடைய பிறந்த நாளை நூலகர் தினமாகக் கொண்டாடுவது மட்டும், இல்லாமல் கடைக்கோடி கிராமம் வரை நூலகப் பயன்பாட்டை மக்களிடம் முழுமையடையச் செய்வோம்.

— திருடி எப் . கிருஷ்ண ராமலிங்கம்


Share it if you like it