தகுதியான பெண்களுக்கு மட்டுமே மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், எங்க பெண்களின் தகுதியை நிர்ணயிக்க நீங்க யாருங்க என்று கேள்வி எழுப்பி இருக்கும் இயக்குனர் பேரரசு, எங்கள் பெண்களுக்கு எந்த இலவசமும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
கே.என்.ஆர். மூவிஸ் சார்பில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் மாவீரன் பிள்ளை. இப்படத்தில் கதாநாயகியாக சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி நடிக்க, கே.என்.ஆர்.ராஜா தயாரித்து, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்டு இயக்குனர் பேரரசு பேசுகையில், “நம்ம ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம், வீரப்பன் மகளும் நடிக்கலாம்.. சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும். தமிழகத்தில் தெருக்கூத்து அழிந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார்கள்.. ஆனால், டாஸ்மாக்கில் குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களை ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு, அதே மதுவை கொடுத்துத்தான் ஓட்டு போடச் சொல்கிறார்கள். மதுவிலக்கை ரத்து செய்வதாகக் கூறினால் ஓட்டுப் போட மாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். எந்த இடத்திலும் அரசியல்வாதிகள் பேசும்போது போதைப் பொருள்கள் லிஸ்டில் மதுவை சேர்ப்பதில்லை. மதுவை விற்கலாம் என்றதால் இனி வரும் நாட்களில் டாஸ்மாக்கை போல கஞ்சா கடை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சாராயம் விற்கும் காசில் அரசாங்கம் நடத்துவது கேவலம். தகுதியான பெண்களுக்கு மட்டுமே 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எங்களது பெண்களின் தகுதியை நிர்ணயிக்க நீங்கள் யார்? எந்தப் பெண் 1,000 ரூபாயை வாங்குகிறாரோ அவர்தான் தகுதியற்ற பெண். எந்தப் பெண் 1,000 ரூபாயை வாங்கவில்லையோ அவர்தான் தகுதியான பெண். எங்களது பெண்களுக்கு 1,000 ரூபாயும் தேவையில்லை, ஓசி பஸ்ஸும் தேவையில்லை. சாராயம் விற்ற காசில் எதுவும் எங்களுக்கு பண்ண வேண்டாம். பாவத்தை எங்கள் தலையில் கட்டாதீர்கள்” என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.