தென்னிந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் அந்நிய சக்திகள்!

தென்னிந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் அந்நிய சக்திகள்!

Share it if you like it

நமது நாட்டைப் பிடிக்க, பல்வேறு வழிகளில், அண்டை எதிரி நாட்டினர் முயற்சி செய்து வருகின்றனர். எனினும், நம்முடைய இந்திய ராணுவத்தின் முயற்சியால், அது தடுக்கப் பட்டு வருகின்றது. தினமும் நாம் நமது நாட்டில், மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றால், அதற்கு முக்கிய காரணம், நம்மை அன்றாடம் காவல் காக்கும், ராணுவ வீரர்கள். எதிரி நாடுகளிடம் இருந்து, நம் நாட்டை, ஒவ்வொரு நொடியும், பாதுகாத்து வருகின்றனர். எனவே தான், மக்கள் அவர்களை எல்லை சாமியாகக் கருதி வணங்கியும் வருகின்றனர்.


நமது நாட்டை பலவீனப்படுத்தும் நோக்கத்தில், எல்லையோரமாக போதை மருந்து போன்ற உடலுக்கு தீங்கு தரும் பொருட்களை, கடல் வழியாக கொண்டு வந்து, இந்தியர்களை தவறான வழியில் வழி நடத்த, அந்நிய சக்திகள் முயல்கின்றன என்ற செய்தி பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது.


பிரபல சமூக ஆர்வலர்களும், தீவிரவாதத்தை ஆதரிக்கும் நோக்கத்தில், கேரளா, தமிழகம் வழியாக போதைப் பொருள் கடத்தப் படுகின்றது என தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இதன் மூலமாக இந்திய இளைஞர்கள், தவறாக வழி நடத்தப்பட்டு, அவர்களுடைய பாதை தடம் புரள வாய்ப்பு உள்ளது எனவும், தங்களுடைய கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.


உயரும் பொருளாதார மதிப்பு:


ஒரு நாட்டில் இருந்து, மற்றொரு நாட்டிற்கு கடத்தப்படும் போது, போதைப் பொருட்களின் மதிப்பும், பெரும் அளவில் ஏறிக் கொண்டே இருக்கும்.
உதாரணத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு, ஆப்கானிஸ்தானில் வாங்கப்படும் ஒரு கிலோ ஹெராயின், சாலை மார்க்கமாக பாகிஸ்தான் வந்ததும், இரண்டு கோடி மதிப்பு உள்ளதாக ஆகி விடும். அவையே, பிறகு இலங்கை வழியாக இந்தியாவிற்குள் நுழையும் போது, மூன்று முதல் மூன்று கோடியே ஐம்பது லட்சம் என அதன் பொருளாதார மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும்.


நவம்பர் மாதம், 2020 ஆம் ஆண்டு:


தூத்துக்குடி அருகே உள்ள, சர்வதேச எல்லை பகுதியில், ஒரு இலங்கை கப்பலை, நமது நாட்டைச் சேர்ந்த கடலோர காவல் படையினர், சோதனை செய்தனர்.


அதில், 100 கிலோ ஹெராயின், 20 கிலோ மெட்டாமார்பின், 5 கைத் துப்பாக்கிகள் என 300 கோடிக்கு மேல் மதிப்பு உள்ள பொருட்களை, இந்திய கடலோர காவல்படை போலீசார் கைப்பற்றினர்.


மும்பை துறைமுகத்தில் இருந்து, கப்பல் மூலமாக, இவைகள் கடத்தப் படுவதாக, புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது. அதன் பேரில், அதிகாரிகள் சோதனையிட்ட போது, வெளி நாட்டிற்கு கடத்த இருந்த ஹெராயின் பிடிபட்டது.
உடனே, அது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பலரும், கைது செய்யப் பட்டனர்.


மார்ச் மாதம், 2021 ஆம் ஆண்டு:


இந்திய கடலோர காவல் படைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அது என்னவெனில், உலக கடல் பகுதியில், இலங்கை மீன் பிடி கப்பல் ஒன்று, கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்திற்கு வருகின்றது எனவும், அதில் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் என ஆயிரம் கோடி பெருமானம் உள்ள பொருட்கள் கடத்தப் படுவதாக, தகவல் கிடைத்தன.


அதன் பேரில், அவை இந்திய கடலோர காவல் படையினரால் கண்டு பிடிக்கப்பட்டு, அவை அனைத்தையும், போலீசார் கைப்பற்றினர்.
ஏப்ரல் மாதம், 2021 ஆம் ஆண்டு:


கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில், இந்திய கடலோர காவல் படையினர், ஒரு கப்பலை சோதனையிட்டதில், 337 கிலோ ஹெராயின் பிடிபட்டது.


ஆகஸ்ட், செப்டம்பர் மாதம், 2021 ஆம் ஆண்டு:


கொழும்பு துறைமுகத்தின் அருகாமையில், 5 கிலோ மீட்டர் தொலைவில், 290 கிலோ ஹெராயின், மீன்பிடி கப்பலில் கண்டு பிடிக்கப் பட்டது. அவை, பாகிஸ்தானின் மக்ரான் துறைமுகத்தில் இருந்து, வந்து உள்ளதாக செய்திகள் வெளியாகின.


போதைப் பொருட்கள் அனைத்தும், கேரளா மாநிலத்திற்கு விழிஞ்சம் மற்றும் கொச்சி துறைமுகம் வழியாகவும், தமிழகத்திற்கு கோடிக்கரை, மண்டபம், வேதாரண்யம், தூத்துக்குடி வழியாகவும் நமது நாட்டிற்குள் நுழைகின்றது. அவை, கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகள், சூடான், காங்கோ போன்ற வெளி நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப் படுகின்றது.


செப்டம்பர் மாதம், 2021 ஆம் ஆண்டு:


சமீபத்தில், குஜராத்தில் பிடிபட்ட போதை மருந்து கடத்தல் தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த தம்பதியினரை, டெல்லியில் இருந்து வந்த வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.


ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இருந்து, ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இந்தியாவில் உள்ள குஜராத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.


அவை, 39 மூட்டைகளாக, இரண்டு கண்டெய்னரில், “டால்கம் பவுடர்” (முகத்தில் தடவும் பவுடர்) என இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. பிடிபட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு, 21 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.


லட்சத்தீவு:


“ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1,000 சுற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. போதைப் பொருள், மதுபானம் கடத்தல் மற்றும் போஸ்கோ சட்ட வழக்குகளும் லட்சத்தீவுகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எனவே, கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன”, என லட்சத்தீவின் மாவட்ட ஆட்சியர் S ஹஸ்கர் அலி, மே மாதம், 2021 ஆம் ஆண்டு, கொச்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


கடலோரத்தை சுற்றியுள்ள லட்சத்தீவிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டு உள்ளன. அங்கு, புதியதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள், கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள சட்டம் இயற்றினர். பல்வேறு இடங்களில் இருந்து, எதிர்ப்புகள் வந்த போதும், துணிந்து நின்று அதை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார்.


லட்சத்தீவிற்கு அருகே உள்ள மாலத்தீவில், சீனாவின் நடமாட்டம் அதிகம் தென் படுகின்றது. நமது நாட்டின் எல்லையோரத்திற்கு, மிக அருகாமையில் உள்ள, இலங்கையிலும் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. சீனா நமக்கு நட்பு நாடு என நாம் உறுதியாகக் கூறி விட முடியாது. தற்போது இந்திய – சீனா எல்லையில் பதட்டம் நிலவுவதே, அதற்கு சான்று.


பத்திரிக்கை செய்தி:


10 ஜூலை மாதம், 2021 ஆம் ஆண்டு – சென்னை, வேளச்சேரியில், போதையில் இருந்த நபரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், மிகப்பெரிய போதை மாத்திரை விற்கும் கும்பல் சிக்கியது. ரூ.1 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீசார், 4 பேரைக் கைது செய்தனர்.


29 செப்டம்பர் மாதம், 2021 ஆம் ஆண்டு – நாகப்பட்டினம் துறைமுகம் அருகே உள்ள கீச்சாங்குப்பம் ஆற்றுப் பகுதியில் இருந்து, இலங்கைக்கு 270 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது, அதனை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கடத்தல் சம்பவம் தொடர்பாக, “நாகை மீனவன்” என்ற பிரபல யூட்யூப் நிறுவனம் பக்கத்தை நடத்தி வரும் குணசீலன், சுங்கத்துறை அதிகாரிகளால் தேடப்பட்டு வருகின்றார்.

எந்த காலத்திலும், தெற்குப் பகுதியில் இருந்து, நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டது இல்லை.


இஸ்லாமிய, கிறிஸ்தவ படையெடுப்பு என பல போராட்டங்களின் போதும், இந்திய வரலாற்றில் தென்னிந்தியா, மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்தது. தற்போது போதை மருந்து பொருட்களை விற்பதன் மூலம், தென்னிந்தியாவை பலவீனமாக்க, அந்நிய சக்திகள் போதை மருந்து பொருட்களை விநியோகம் செய்கின்றனவா? என்ற சந்தேகம் எழுகின்றது.


வடக்கில் உள்ள காஷ்மீர், மிகப்பெரிய சுற்றுலா தேசமாக வளர வேண்டியது, ஆனால், அங்கு தீவிரவாத செயல்கள் மூலமாக, மக்களை வர விடாமல் அச்சுறுத்தி, தீவிரவாத செயல்கள் மூலம், எப்போதும் பதட்டமான நிலையை ஏற்படுத்தி, வைத்து இருந்தனர், தீவிரவாதிகள். அதுபோல், தெற்குப் பகுதியையும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனரா? என்ற அச்சமும் மக்கள் மனதில் ஏற்படுகின்றது.


போதைப் பொருள் கடத்தலுக்கு வழித்தடமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் அமைந்துள்ளன எனவும், அதன் மூலமாக புரளும், பல கோடி ரூபாய் பணம் என்பது நாட்டை சுடுகாடாக்கும் தேச விரோதம், குண்டு வெடிப்பு உட்பட பல தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப் படுகிறது எனவும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக எதிர் கட்சி தலைவர் அவர்களும், அக்டோபர் 1, அன்று அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.


மக்களுக்கு தீங்கு தரும், எந்த ஒரு செயலையும் ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’. அமைதிப் பூங்காவாக வாழும் தமிழக மக்கள், எப்போதும் மகிழ்ச்சியாக வாழ, அரசு வழிவகை செய்ய வேண்டும். செய்வார்கள் என நம்புவோம்…

  • அ. ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Share it if you like it