உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. நிலப்பரப்பில் பெரிய நாடு . பன்முகத் தன்மையும் பழமையும் பெருமையும் ஆன்மீக மகத்துவமும் வாய்ந்த பாரத தேசத்தில் அதன் முன்னாள் பிரதமர் ஒருவரை வெளிநாடுகளில் இருந்யும் வந்தவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்ததும் அதற்கு உள் நாட்டில் தனி நபர்கள் முதல் அமைப்புக்கள் கட்சிகள் வரை பலரும் உடந்தையாக இருந்ததும். சாதாரண விஷயம் அல்ல. இராஜீவின் கொலையை கொண்டாடியவர்கள் பின் நாளில் அந்த கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு பெரும் பிரயத்தனம் செய்வதும் அவர்கள் விடுதலையை வெற்றி விழாவாக கொண்டாடுவதும் இந்த தேசத்தின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே. இன்று வரை இராஜீவ் கொலையாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த மண்ணில் சர்வசாதாரணமாக உலவுவது அவர்கள் அரசியல் செல்வாக்கு சர்வதேச பிண்ணணியின் சாட்சியம். அந்த வகையில் இராஜீவ் காந்தி கொலை என்பது வெறும் தனிமனித கொலையோ அரசியல் கொலையோ அல்ல. அது இந்திய துணை கண்டத்தை பல துண்டுகளாக சிதறடிக்க வேண்டும் என்ற வெளிநாட்டு சதி மற்றும் உள்நாட்டு துரோகத்தின் ஒரு நுனியாகும்.
முன்னாள் பாரத பிரதமர் இராஜீவ் காந்தி .- அவர் ஒரு முன்னாள் இந்திய விமானி. மாபெரும் தேசிய கட்சியின் தலைவர். முன்னாள் கட்சி தலைவர் மற்றும் பிரதமர்களின் மகன் பேரன் என்ற வகையில் சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் நீண்ட பயணம் செய்து வந்த ஒரு குடும்பத்தின் வாரிசாக தேசிய அரசியலில் கோலோச்சியவர். வெளிநாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்தவர். பிரதமர் பொறுப்பு வகித்தவர்.போபர்ஸ் பீரங்கி கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் ஆட்சி இழந்தவர். மீண்டும் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சாத்தியக் கூறுகளோடு காத்திருந்தவர்.
இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதன் காரணமாக இலங்கையின் விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் இலங்கை அரசு இரண்டும் இராஜீவ் மீது பகையும் வன்மமும் கொண்டிருந்தது. இலங்கை அரசு முறை பயணத்தில் இலங்கை இராணுவ வீரனால் நடந்த கொலை முயற்சியில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியவர். உள்நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதம் மற்றும் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் சம்பந்தப்பட்ட வன்மம் விரோதமும் அவருக்கு அச்சுறுத்தலாக இருந்தது. பல கொலை முயற்சியில் அவர் உயிர் தப்பியவர்.
இந்த நிலையில் அவரின் மரணத்திற்கு முன் அவரின் விசேஷ பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. அவரின் பாதுகாப்பு விஷயத்தில் உளவுத்துறை அலட்சியம் காட்டியது. அவரின் பிரயாண பட்டியலில் இடம் பெறாத இடத்தில் திடீரென நிகழ்ச்சி ஏற்பாடாகி அதில் கலந்து கொள்ள வந்தவர் மனித வெடி குண்டு தாக்குதல் மூலம் கொடூரமாக கொல்லப்பட்டது என்ற சங்கிலி தொடர் நிகழ்வுகள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அரசியல் சித்தாந்தம் மாறுபட்ட கொள்கை எல்லாம் கடந்து தேசத்தின் முன்னாள் பிரதமர் மாபெரும் தேசிய கட்சியின் தலைவர் .அவர் மீது ஆயிரம் குற்றம் குறைகள் இருந்தாலும் அவரின் கொலையை ஏற்க முடியாது .
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணை தொடங்கிய நாளில் இருந்தே இந்த விசாரணை உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் போக்கில் போகாமல் இவ்வழக்கின் மூலத்தை மூடி மறைத்து குற்றவாளிகளுக்கு அரணாக நிற்கிறதோ? என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்தது . அதற்கான காரணங்கள்
1– காந்தி மற்றும் இந்திரா படுகொலை போல வெளிப்படை விசாரணை இல்லாது ராஜீவ் கொலை தடா சட்டத்தின் கீழ் நீதி விசாரணை நடைபெறும் என்ற அறிவிப்பு .
2– ராஜீவ் கொலை வழக்கு விசாரணை கமிஷன் தலைவராக திறமையற்ற நேர்மையற்ற அதிகாரி என்று பெயரெடுத்த ஒருவரை நியமித்தது.
3–,இந்த கொலை வழக்கில் சம்பவ இடத்தில் கிடைத்த முக்கிய தடயங்கள் பலவற்றை விசாரணை கமிஷனிடமிருந்து பறித்தது.
4– இவ்வழக்கில் முதல் நிலையிலேயே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டிய அப்போதைய தேசிய,மற்றும் மாநில உளவுத்துறை தலைமையை விசாரிக்காதது.
5– பூந்தமல்லி மல்லிகை கட்டிடத்தில் இருந்த விசாரணை கமிஷன் மற்றும் சிறப்பு நீதிமன்ற அலுவலகத்தில், ராஜீவ் கொலையில் சந்தேக பட்டியலில் இருந்தவர்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவாளர்கள் பணியமர்வு பெற்றதும், சந்தேக பேர்வழிகள் சர்வ சுதந்திரமாக நடமாட அனுமதித்தது.
6– முக்கிய குற்றவாளிகளான சிவராசன் -சுபா உள்ளிட்ட குழுவினரை சென்னையிலேயே கைது செய்வதற்கான வாய்ப்பு இருந்தும் அதை தவிர்த்ததும், மைசூருக்கு தப்பிச்செல்ல உதவியவர்களை கண்டும் காணாமல் விட்டதும், மைசூரில் பதுங்கி இருந்த சிவராசன் -சுபாவை உயிரோடு பிடிக்கும் அவகாசம் இருந்தும் அதை தவிர்த்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு போதுமான அவகாசம் அளித்தது.
7– கோடியக்கரை- வேதாரணயம்,- தொடங்கி சென்னை வரை இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலரும் விபத்து ,மர்ம மரணம் என்று மரணித்த போது அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டது.
8– ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு காரணமாய் இருந்த குடும்பத்தையும் அவர்களின் பின்னணியில் இருந்த மர்மம் பற்றியும் இறுதிவரை எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் போனது.
9– ஏற்கனவே ராஜீவ் மீது நடந்த கொலை முயற்சிகளையும் படுகொலையில் ஈடுபட்டிருந்த குற்றவாளிகளின் பின்னணியையும் ஒருங்கிணைத்து எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் விட்டது.
10– புது தில்லியில் இருந்து ராஜீவ் புறப்பட்டது முதல் ஸ்ரீபெரும்புதூர் வந்து சேர்ந்தது வரை அவரது பிரயாணத்தில் நடந்த குளறுபடிகள்- அதற்கு காரணமான நபர்கள்- பின்னணி பற்றி எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் போனது.
11– ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்த நாளில் அவரோடு சொந்தக் கட்சி முதல் கூட்டணி கட்சி வரை எந்த ஒரு தலைவரும் உடன் இல்லாமல் போனதும், அன்றைய தினம் நடைபெற இருந்த பல்வேறு கட்சிகளின் கூட்டங்கள் சத்தமின்றி ரத்து செய்யப்பட்டதன் மர்மத்தை இறுதிவரை விசாரிக்காமல் விட்டது.
12– உளவுத்துறை- தமிழக காவல்துறை- காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டம் என்று பல்வேறு தளங்களில் ராஜீவ் கொலை குறித்த சந்தேகம் பரவி இருந்த போதும் சம்பந்தப்பட்ட நபர்களில் ஒருவரை கூட விசாரணை வளையத்திற்குள் கொண்டு வராமல் தவிர்த்தது.
13– தமிழக மாநிலம் கடந்து பாரதம் கடந்து சர்வதேச அளவில் விரிந்து பல கோணங்களில் விசாரணை நடப்பதற்கு தேவையான அத்துணை முகாந்திரமும் இருந்த போதிலும் , ஒரு குறுகிய வட்டத்தில் முழு விசாரணையும் பெயரளவில் நடத்தப்பட்டு மேம்போக்காக முடிக்கப்பட்டது.
14– குற்றவாளிகளின் விசாரணை- வாக்குமூலம்- அவர்களின் மீது பதியப்பட்ட வழக்குகள் என்று அனைத்திலும் எவ்வளவு குளறுபடிகளை செய்து இந்த வழக்கை நீர்க்க செய்ய முடியுமோ? அத்தனையும் செய்ததோடு, பின் நாளில் இந்த குற்றவாளிகள் எல்லாம் இப்படி விடுதலை ஆவதற்கு தேவையான அத்தனை வாக்குமூலங்களையும் அந்த விசாரணை கமிஷனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொதுவெளியில் ஊடகங்களில் முன்னெடுத்தது.
15– இவை அனைத்திற்கும் மேலாக இன்று வரை இதையெல்லாம் எதிர்த்து மேல்முறையீடு என்றோ, குறைந்தபட்சம் இதையெல்லாம் நாங்கள் கண்டிக்கிறோம் எதிர்க்கிறோம் என்று கூட வாய் திறக்காத இராஜிவின் குடும்பம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையும் அதன் தொண்டர்களும், ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு காரணமானவர்களோடு கூட்டணி அரசியல் என்ற பெயரில் பதவி சுகம் காண்பது.
16– ராஜிவ் கொலை வழக்கு பற்றி பாஜக வாஜ்பாய் அரச அமைத்த ஜெயின் கமிஷன் அறிக்கையை அடுத்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி கிடப்பில் போட்டது.
17- இராஜீவ் பிரேமதாசா கொலை வழக்கில் வெடிகுண்டு ஒற்றுமை பற்றிய விவகாரத்தை விசாரணை இன்றி கடந்தது.
18- இராஜீவ் காந்தி மீது கொலை வெறி தாக்குதல் நடத்த முயன்ற அடிப்படையில் அவரது கொலை வழக்கில் இலங்கை அரசு மற்றும் உளவுத்துறை மீது குற்றச்சாட்டு விசாரணை எதுவும் இல்லாதது.
19 இராஜீவ் காந்தியின் படுகொலை அன்று அவரின் விமான தாமதம் முதல் தனி பாதுகாப்பு அதிகாரி குப்தா கைத்துப்பாக்கி இல்லாமல் வந்தது வரை எதுவும் விசாரணை தரவுகள் இல்லாமல் கடந்து போனது.
20 இராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவரின் மீதான முந்தைய கொலை முயற்சிகள் மிரட்டல்கள் அனைத்தையும் சேர்த்து விசாரிக்காமல் போனது
21 இந்திரா காந்தி கொலையின் நீட்சியா? இராஜீவ் காந்தி கொலை என்ற கோணத்தில் விசாரணை நடத்தாதது
22 போபர்ஸ் பீரங்கி ஊழல் சம்பந்தப்பட்ட உள்நாட்டு நபர்கள் மற்றும் அது சம்பந்தமான வெளிநாட்டு ஆயுத வியாபாரிகள் தரகர்கள் யாரும் விசாரணைக்கு உட்படுத்தாதது.
23 இராஜீவ் காந்தி கொலையால் ஆதாயம் அடைந்தவர்கள் அல்லது எதிர் பார்த்தவர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை இல்லாதது சந்தேகம் எழுந்த நபர்கள் யாரும் விசாரணை வளையத்தில் வராதது அவர்கள் எல்லாம் பின் நாளில் பெரும் செல்வாக்கு மற்றும் உயர் பதவிகள் பெற்றது.
24 ஆரம்பகால முதல் ராஜீவ் கொலைகள் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்கள் அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடிய வழக்கறிஞர்கள் என்று அனைவரும் இத்தனை ஆண்டுகால வழக்கு- விசாரணை -செலவு அனைத்தையும் கடந்து இன்று பன்மடங்கு ஆடம்பரம் வசதியோடு- அதிகார செல்வாக்கு பலத்தோடு வலம் வரும் மர்மம்.
25 இராஜீவ் காந்திக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்த பாலஸ்தீன அதிபர் இயாசர் அராஃபத் முதல் இராஜீவ் கொலையான அன்று அவரை புதுதில்லி விமான நிலையத்தில் புலிகள் தரப்பில் தூதுவராக சந்தித்து புதிய இலங்கை தமிழ் புலவர் காசி ஆனந்தன் வரை ஒருவரும் சாட்சியாக கூட விசாரணை செய்யப்படவில்லை.
இதை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும்போது ராஜீவை கொன்றது இலங்கையில் இருந்த தீவிரவாதமும் இங்கிருந்த கைக்கூலிகளும் என்றாலும், அதற்கு முழு உடந்தையாக இருந்து அதன் பலனை அறுவடை செய்த கைகள் கட்சி -அரசியல்- அப்போதைய அரசு எந்திரத்தின் மேல் மட்டத்திலும் பரவி இருந்ததும், இதன் பிண்ணனியில் . பலம் பொருந்திய பல அந்நிய கைவரிசை,இருந்ததும், தெளிவாகிறது. இன்று வரை இந்த குற்றவாளிகளை எல்லாம் நீதி விசாரணை என்ற பெயரில் மெத்தனமாக கையாண்டு இன்று அவர்களை சுதந்திர பறவையாக விடுவித்திருப்பதில் அவர்கள் அத்தனை பேரின் பங்கும் இருப்பதும் நிருபணமாகிறது.
அண்டை நாட்டில் இருந்து தன் சொந்த தேசத்தில் ஊடுருவி தன் தேசத்தின் ஒரு தேசிய கட்சி தலைவரை முன்னாள் பிரதமரை, அவரோடு சேர்த்து பாதுகாவலர் -பாதுகாப்பு அதிகாரிகள்- காவல்துறை- பொதுமக்கள் என்று பலரை கொன்று குவித்த கொலைகாரர்களை விடுவித்து பத்திரமாக ஊருக்கு திருப்பி அனுப்புவதும், அவர்களை கட்டி அணைத்து ஆரத் தழுவி அவர்களை அரசு விருந்தினர்கள் போல கவுரவிப்பதும், உலகில் வேறு எந்த தேசத்திலும் காண முடியாத, பாரதத்தில் மட்டுமே காணும் துரதிருஷ்டம்.
தேசத்தின் முன்னாள் பிரதமரின் கொலை குற்றவாளிகளுக்கு இவ்வளவு சலுகைகளை வழங்கும் சட்டம் – நீதித்துறை ஊழல்வாதிகளுக்கும் இதர குற்றவாளிகளுக்கும் எப்படிப்பட்ட கண்டிப்பை காட்ட முடியும்? சாமானிய மக்களை எப்படி பாதுகாக்க முடியும் ?.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றாலும் தேசத்தின் முன்னாள் பிரதமரின் கொலைக்கு என்றேனும் ஒரு நாள் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற காத்திருப்பு கானல் நீரானது.
இராஜீவை கொல்ல மாபாவிகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவரோடு சேர்ந்து சிதறிய பாதுகாப்பு மற்றும் காவல் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என்று வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள் உட்பட கொன்று குவித்த மனித மிருகங்களுக்கு அவர்களால் நடந்த இன்னல் என்ன? சொல்ல முடியுமா? கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்க ஆயிரம் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இருக்கலாம் பணத்தை வாரி இறைத்து காப்பாற்ற தியாகி பட்டம் சூட்ட கூட காத்திருக்கலாம் .
ஆனால் தமிழகம் எனது தாய் வீடு போல அங்கு எனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும் என்று நீங்கள் சொல்வது எனக்கு சிரிப்பாக இருக்கிறது என்று உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொல்லி விட்டு தமிழகம் வந்தவரை உயிர் காக்கும் கவசம் கூட இல்லாமல் மக்களோடு மக்களாக நடந்தவரை இரத்த வெள்ளத்தில் சிதறடித்து விட்டார்களே ? என்று குமுறும் தேசாபிமானிகளின் கண்ணீரும் இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்? இதை செய்தவர்கள் வேறு எந்த கெடுதலை இந்த தேசத்திற்கு செய்ய தயங்குவார்கள்? என்று கலங்கும் வேதனை
எல்லாம் சாபமாக மாறி துரத்தும் போது அதிலிருந்து எப்படி தப்ப முடியும்? யார் காப்பாற்ற முடியும்? சட்டத்தின் தீர்ப்பை இன்று பார்த்தோம் காலதேவன் தீர்ப்பு என்று ஒன்று இருக்கிறதே பார்க்க தான் போகிறோம்.
இராஜீவ் கொலையாளிகள் வேறும் கொலை குற்றவாளிகள் இல்லை அவர்கள் இந்த தேசத்தை கூறு போட நினைக்கும் தேச துரோகிகளே.
இந்த கொலையை ஆதரிப்பவர்களும் இந்த கொலை குற்றவாளிகளை தியாகிகள் போல சித்தரிக்க நினைப்பவர்களும் இந்த தேசத்தின் ஓரூமைப்பாடு இறையாண்மைக்கு எதிரானவர்களே. நம் தேசத்தின் ஒருமைப்பாட்டை சிதைத்து துண்டாடி அதன் மூலம் ஆதாயம் தேட நினைக்கும் சர்வதேச சதிகாரர்களின் கைக்கூலிகளாக இங்கிருந்து செயல்படும் தேச துரோகிகளே.
உள்நாட்டு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் முதல் இலங்கை போராட்ட குழுக்கள் ஆதரவாளர்கள் வரை இராஜீவ் காந்தி கொலை ஆதரவாளர்கள் அவர்களுக்கு துணையாக இருக்கும் கட்சிகள் அமைப்புகள் வரை யாவும் இன்று ஓரணியில் திரண்டு நிற்பதையும் அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல ஆர்எஸ்எஸ் – பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் மோடி எதிர்ப்பு அரசியல் என்ற பெயரால் இந்து – இந்திய விரோத அரசியலை செய்வதை இன்று கண்கூடாக காணலாம். அந்த வகையில் இந்தியாவில் வலுவான ஆளுமை இருக்க கூடாது. இந்திய உள்நாட்டு அரசியல் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வெளிநாட்டு சதிகளும் புரியும்.. இராஜீவ் காந்தி கொலையை கொண்டாடியவர்கள் எல்லாம் இன்று கோ பேக் மோடி என்று வீதியில் இறங்குவதும் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளானதை காங்கிரஸ் – திமுக – கம்யூனிஸ்ட் தொடங்கி போராளிகள் வரை விழாவாக கொண்டாடி மகிழ்ந்ததை பார்க்கும் போது சுதந்திர இந்தியாவின் அரசியல் களம் முழுவதும் எவ்வளவு தூரம் உள்நாட்டு துரோகிகமும் அந்நிய அடிவருடும் தேச விரோதமும் மலிந்திருக்கிறது என்பதும் புரியும்.