பூ பூ ராமு
(சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக, 47 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவரும், கோயமுத்தூர் – ஒண்டிப்புதூர் காந்தி என்றழைக்கப் படுபவருமான பூ. பூ. ராமு)
பூ பூ ராமு என்ற சு. ராமசாமி, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பெரும் பங்காற்றினார். அவர் கோயமுத்தூரை அடுத்த ஒண்டிப்புதூரில், வாழ்ந்து வந்தார். ஒண்டிப்புதூர் மக்களால் “கோயமுத்தூர் – ஒண்டிப்புதூர் காந்தி” என்று அழைக்கப்பட்டார்.
பூ பூ ராமு, மேட்டுப்பாளையத்தில் 15 மே 1917 அன்று, சுப்பா நாயுடு – மங்கு தாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருக்கு பெற்றோர்கள் சூட்டிய பெயர் சு.ராமசாமி என்பதாகும். அவருடைய தந்தை, மளிகை கடை நடத்தி வந்தார். ராமசாமி, தனது 5 வது வயதில், தனது தந்தையை இழந்தார். இதனை அடுத்து, அவரும் அவரது குடும்பமும், பெரும் சிரமங்களை சந்தித்தது. அதன் பிறகு, அவரது குடும்பம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஒண்டிப்புதூருக்கு சென்றது. சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர், கோயம்புத்தூர் நகரத்திற்கு உட்பட்ட ஊராகும். அது, கோயமுத்தூர் நகராட்சியை சேர்ந்ததாகும்.
ஒண்டிப்புதூர் விவசாய நிலங்களால் சூழப்பட்ட ஊராகும். நெல், தேங்காய் மற்றும் கரும்பு போன்றவை பெருமளவில், சாகுபடி செய்யப்பட்டது. அன்றைய நாட்களில், அப்பகுதியில் நெசவுத்தொழில் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்பகுதியில், சுமார் 2000 நெசவாளர்கள், அப்பகுதியில் இருந்து வந்தனர். பூ பூ ராமு அவர்களின் தாயார், அப்பகுதியில் 6 ஆண்டுகளாக சாலையோர இட்லி கடை ஒன்றை நடத்தி வந்தார்.
ராமசாமியின 13 வது வயதில், தனது தாயையும் இழந்து, ஆதரவற்ற நிலையில் இருந்தார். அவரது தாயின் மரணத்திற்கு பிறகு, அவரது மாமா ராமசாமி மற்றும் அத்தை பொன்னம்மாள் ஆகியோரால் வளர்க்கப்பட்டார். சிறுவனான ராமசாமி, தனது வயதுடைய சிறுவர்கள் காற்றில் பட்டம் விட்டு விளையாடி கொண்டிருந்த சமயத்தில், குடும்ப நிதி சுமையை குறைக்க வேலைக்கு சென்றார்.
கம்போடியா ஆலை அருகில் தனது அத்தை மாமா நடத்தி வந்த உணவகத்தில், பணிபுரிந்து வந்தார். அந்த உணவகம் ‘ஹோட்டல் காந்தி நிறுவனம்’ என்ற பெயரில், இயங்கி வந்தது. அவருடைய அத்தையும், மாமாவும் கொண்டிருந்த நாட்டுப்பற்றின் காரணமாக பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களில் கலந்து கொள்ளவும், சுதந்திர போராட்ட வீரர்களின் சொற்பொழிவுகளை கேட்கவும், தவறியதில்லை. இந்த சூழ்நிலையே பூ பூ ராமு அவர்களுக்கு, தனது சிறு வயதில் முதலே, தேச பக்தியை வளர்த்தது.
பூ பூ ராமு அவர்கள் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு வரை பயின்றார். ஆனால் சில சூழ்நிலைகளால், அவரால் தனது படிப்பை தொடர முடியவில்லை. தனது மாமாவின் குடும்பத்தை நிலை நிறுத்த உதவும் வகையில், பள்ளி படிப்பை கைவிட்டார். தனது பள்ளிப்படிப்பை காட்டிலும், நாட்டின் அரசியல் நடவடிக்கைகளின் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். 1935 ஆம் ஆண்டு காந்தி, நேரு மற்றும் காமராஜர் ஆகியோருடனான சந்திப்புகள், அவரை சுதந்திர போராட்டத்தில் பங்குபெற தூண்டியது.
ராமசாமி அவர்கள், கோயமுத்தூர் தெருக்களில் ஒலி பெருக்கியை பயன்படுத்தி, சுதந்திர போராட்டத்தின் முக்கியத்துவத்தை, பரப்புரை செய்த காரணத்தினால், கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன்னிலையில், ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அந்த மாஜிஸ்திரேட், ராமசாமி அவர்கள் பயன்படுத்திய சாதனத்தை பற்றி கேட்டார். அதற்கு வக்கீல்கள் ஒரு காகிதத்தை ஒலி பெருக்கியை போன்று கூம்பு வடிவத்தில் உருட்டி “பூ.. பூ..” என்று கூச்சலிட்டு விளக்கினர். எனவே, அன்றிலிருந்து அவருடைய பெயர் பூ பூ ராமு என்றானது.
N G ராமசாமி அவர்களின் வழிகாட்டுதல் படி, ராமு அவர்கள் தனது இளம் வயதில், தொழிலாளர் தலைவரானார். அந்நாட்களில் பல ஆலைகள், இயங்கி வந்தன. பூ பூ ராமு அந்த ஆலைகளுக்கு, சைக்கிளில் சென்ற தொழிலாளர்களுக்கு அறிவிப்புகளை வழங்கி வந்தார். வெள்ளையர்களை வெளியேற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, காந்திஜி மற்றும் பல தலைவர்கள் கைதாயினர். இதன் தொடர்ச்சியாக வ உ சி பூங்காவில், பெருந்திரளான மக்கள் கூடினர். மக்களே போராட்டத்தை கையில் எடுத்தனர். கோயமுத்தூரில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முழு வீச்சில் செயல்பட்டு வந்தது. மக்கள் மிக தீவிரமான நடவடிக்கைளில் ஈடுபட விரும்பினர்.
திரு ராமசாமி மற்றும் அவரது நண்பர்கள் இருள் சூழ்ந்த ‘கொக்களி தோட்டத்தில்’, சந்தித்து வந்தனர். அவருடைய நண்பர்கள், இயக்க நடவடிக்கைகளின் ரகசியத்தை, காப்பதாக உறுதியளித்தனர். ராமசாமியின் இளைஞர்கள் குழு சூலூர் சதி வேலை, ஆயுதம் ஏற்றி வந்த சரக்கு ரயில் கவிழ்ப்பு மற்றும் மதுக்கடைகளை எரித்தது போன்ற செயல்களில் ஈடுபட்டது.
பூ பூ ராமு குடும்பத்தினரை துன்புறுத்துதல்:
பூ பூ ராமு மற்றும் அவரது சகோதரர் K.V.குருசாமி, கோயமுத்தூரில் இருந்து வெளியேறி, இருவரும் அவர்களுடைய நண்பர் பாப் ஜானின் வீட்டில் தங்கியிருந்தனர். ராமு அவர்களுடைய அத்தையும், மாமாவும் நீண்ட காலமாக, போலீசாரின் துன்புறுத்துதலுக்கு ஆளாயினர். அவர்களுடைய வீடும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்த செய்தியை பூ பூ ராமு மற்றும் அவரது சகோதரர் K.R.குருசாமி ஆகியோரின் மைத்துனர், தபால் மூலமாக அவர்களுக்கு தெரியப் படுத்தினர். அவருடைய மைத்துனரும் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் மூன்று நாட்கள் காவலில் எடுத்து பூ பூ ராமு மற்றும் K.V.குருசாமி ஆகியோரின் இருப்பிடத்தை கேட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பூ பூ ராமு குடும்பத்தினர் நடத்தி வந்த உணவகமும் காவல் துறையினரால் சூறையாடப்பட்டது.
காவல் துறையினரிடம் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற, பூ பூ ராமு மற்றும் அவரது சகோதரர் குருசாமி காவல் துறையினரிடம் சரணடைய முடிவு செய்தனர். செப்டம்பர் 10 ம் தேதி 1942 ம் ஆண்டு இருவரும் தங்களது நண்பர் பாப் ஜானின் உதவியுடன் கோயமுத்தூர் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பூ பூ ராமு அவர்களின் சிறை வாழ்க்கை:
பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பூ பூ ராமு அவர்களுக்கு, 47 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சூலூர் விமான தளத்தை எரியூட்டிய குற்றத்திற்காக 20 ஆண்டுகளும், ஆயுதங்கள் சுமந்து சென்ற ரயிலை கவிழ்த்த குற்றத்திற்காக 20 ஆண்டுகளும், மதுக்கடைகள், தபால் அலுவலகம் எரித்தது போன்ற குற்றத்திற்காக 7 ஆண்டுகளும், ஆக மொத்தம் 47 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். தண்டனை வழங்கிய நீதிபதியிடமே தான் “வெளியில் அடிமையாக வாழ்வதை விட என் வாழ்நாள் முழுவதும் சிறைவாசம் அனுபவிக்க தயாராக உள்ளேன்” என்று வீரத்துடன் கூறினார். “என்னுடைய ஜாதகத்தை வைத்து என்னுடைய ஆயுளை கணித்து அதற்கேற்றவாறு ஏன் எனக்கு சிறை தண்டனை வழங்க கூடாது?” என்று நீதிபதியிடமே துணிச்சலாக கேள்வி எழுப்பினார். அவருக்கு 47 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டாலும், நான்கு ஆண்டுகள் மட்டுமே சிறை வாசம் அனுபவித்தார். அதன் பின்னர், நாடு சுதந்திரம் அடைந்து சுய ஆட்சி அமைந்த பிறகு, பூ பூ ராமு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்.
சிங்காநல்லூர் மற்றும் சூலூர் சிறைவாசம்:
ராமசாமி அவர்கள் ஆரம்ப கால சிறைவாசத்தை, சூலூர் சிறையில் அனுபவித்தார். பிறகு, சிங்காநல்லூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அவர் சூலூர் மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலையங்களில், துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டார். ஆனாலும் அவர் எக்காரணம் கொண்டும், சதிச்செயலில் ஈடுபட்டவர்களை காட்டிக் கொடுக்கவில்லை.
சிங்காநல்லூர் காவல் நிலையத்தில், காவல் உதவி ஆய்வாளர் லக்ஷ்மன பெருமாள் தனது பூட்ஸ் கால்களால், பூ பூ ராமுவை உதைத்தார். சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார், பூ பூ ராமுவுடன் சேர்ந்து சதி வேலையில் ஈடுபட்ட சக போராளிகளின் பெயர்களை கேட்டு பெறுவதற்காக, அவருடைய கைகளை தண்ணீரில் மூழ்க செய்து, ஆணியை கொண்டு நகத்துக்கும் சதைக்கும் இடையில் குத்தி துன்புறுத்தினர். பிரிட்டிஷ் போலீசார் கைது செய்யப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை தண்ணீரில் ஊர வைக்கப்பட்ட செருப்பால் அடித்து துன்புறுத்தினர்.
திருப்பூர் சிறையில் :
பூ பூ ராமு அவர்கள் திருப்பூர் துணை சிறைச் சாலையில், எட்டுக்கு எட்டு சதுர அளவு கொண்ட சிறிய இருள் சூழ்ந்த அறையில் கழித்தார். அவனுடன் சேர்த்து மேலும் மூன்று கைதிகள், அந்த அறையில் அடைக்கப் பட்டனர். அங்கேயும் அவர் துன்புறுத்தப் பட்டார்.
பெல்லாரி சிறையில்:
மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள், அவர் பெல்லாரி சிறையில் அடைக்கப் பட்டார். அந்த சிறை தான், இந்தியாவில் பிரபலமான பழமையான சிறை, இந்த சிறையில் இருந்த, பெரும்பாலான கைதிகள் சுதந்திர போராட்ட வீரர்களே ஆவர். இந்த சிறைச்சாலை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்ற, விடுதலை போராட்ட வீரர்களை, சிறை வைப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. பூ பூ ராமு அவர்களின் சகோதரர் குருசாமி அவர்களும், இதே சிறையில் அடைக்கப்பட்டார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக திரு ராஜகோபாலச்சாரி அவர்களின் தலைமையில், இடைக்கால அரசு அமைந்தது. அந்த அரசு அமைந்த பிறகு, இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை ஆன பிறகு, பூ பூ ராமு அவர்கள் பெல்லாரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது R.A. சண்முக தேவர் அவர்கள், ஈரோடு ரயில் நிலையத்தில் வரவேற்றார். பூ பூ ராமு அவர்களை வரவேற்பதற்காக பெருந்திரளான மக்கள், திருப்பூரிலும் ஒண்டிப் புதூரிலும் கூடினர். பூ பூ ராமு அவர்கள் அரை கால் சட்டையும், வெள்ளை சட்டையும் தலையில் தொப்பியும் அணிவது வழக்கம். அன்றைய அரசு பூ பூ ராமு மற்றும் பிற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு, தாராபுரம் அருகில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கியது. ஆனால், பூ பூ ராமு அவர்கள் அதனை பெற மறுத்து விட்டார். அதே போன்று கலெக்டர் அபுல் ஹாசன் பாப்பம்பட்டி பிரிவில், இரண்டு ஏக்கர் நிலம் பூ பூ ராமு அவர்களுக்கு வழங்கினார். அதையும் அவர் நிராகரித்து விட்டார்.
விடுதலை ஆன பிறகு, பூ பூ ராமு அவர்கள் லக்ஷ்மி அம்மாள் அவர்களை திருமணம் செய்தார். அவர்களுக்கு, தர்மராஜன் மற்றும் மனோகரன் என்று இரண்டு மகன்கள் பிறந்தனர். அப்போதைய முதல்வர் காமராஜர் பாராட்டி பத்திரம் வழங்கினார். ராமசாமி அவர்கள் காமராஜரை பின்பற்றி வந்தார். காமராஜர் ஆட்சியின் நினைவுகளை மனதில் கொண்டிருந்தார்.
“காமராஜர் அவர்கள் பள்ளிகளை நிறுவி, மதிய உணவு திட்டத்தை அறிமுகப் படுத்தியதன் மூலம், குழந்தைகளுக்கு அறியாமை மற்றும் பசி இல்லாமல் இருப்பதை, உறுதி செய்தார். அவர் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து, சமுதாயத்திற்கு பல நன்மைகளை செய்தார். நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த போது, அவர் காலமானது என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
ஒண்டிப்புதூரில் அவரது திரு உருவ சிலையை அமைத்து, அவரது நினைவுகளை மக்களின் மனதில் என்றும், நிலைநிறுத்த வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக அவரை நன்கு அறிந்த மக்களிடம் ஆதரவு கோரினேன். தொழிலதிபர் S.N.R.சின்னசாமி நாயுடு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. உள்ளூர் தலைவர்கள் பலர் இந்த முன்னெடுப்புக்கு ஆதரவளித்தனர். ஆயிரம் கிலோ எடை கொண்ட காமராஜரின் திரு உருவ சிலை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்யப்பட்டது. தொழிலதிபர் S.N.R. சின்னசாமி நாயுடு ஒரு லாரியை அனுப்பினார். அந்த லாரி ஓட்டுனரிடம் சிலையை ஏற்றுவதற்கு முன்பு வாகனத்தில் அதிக கனமான அளவு மணலை பரப்பி, அதன் மீது சிலையை வைத்து மிகுந்த பாதுகாப்புடன் கோயமுத்தூருக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். அந்த சிலை பா.ராமச்சந்திரன் அவர்களால், அவசர நிலை அமலில் இருந்த அந்த நாட்களில் ஒண்டிப்புதூரில் உள்ளது.
திருச்சி சாலையில் (மேம்பாலம் அருகில்), பெரும் ஆரவாரம் இன்றி நிறுவப்பட்டது. காமராஜரின் திரு உருவ சிலையை கொளுத்தும் வெயிலில் வெட்ட வெளியில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எனவே அவரின் சிலைக்கு சிறந்த முறையில் மண்டபம் அமைத்தோம். தலைவர்களின் சிலையை நிறுவுவதோடு, அதனை பாதுகாப்பதும், நமது கடமை ஆகும். இப்போது எனக்கு 98 வயதாவதால், சிலையை பாதுகாக்க குழு ஒன்றை அமைத்துள்ளேன்.” – பூ பூ ராமு.
ராமசாமி அவர்கள், இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆற்றிய பங்கை அங்கீகரித்து, 1972ம் ஆண்டு அவருக்கு, ‘தாமரை பட்டயம்’ வழங்கி கவுரவித்தது. பூ பூ ராமு அவர்கள், வயது மூப்பு காரணமாக, 2015 ம் ஆண்டு, அக்டோபர் 9ம் தேதி காலமானார். பூ பூ ராமு அவர்கள், தனது வாழ்வில் பெரும் சாதனைகளை படைத்த போதிலும், கர்வம் கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.
- சரவணக் குமார்