வாரணாசி மசூதியில் கள ஆய்வு: 1 கி.மீ.க்கு போலீஸ் குவிப்பு!

வாரணாசி மசூதியில் கள ஆய்வு: 1 கி.மீ.க்கு போலீஸ் குவிப்பு!

Share it if you like it

வாரணாசி கியான்வாபி மசூதியில் இன்று காலை கள் ஆய்வு தொடங்கி இருக்கிறது. இதையொட்டி, சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசி எனும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இதை, காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்திலுள்ள முக்தி மண்டபத்திலிருந்தபடிதான் தரிசிக்க வேண்டும். இந்த சுவர், மசூதிக்கும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் இடையே அமைந்துள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1991-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிங்கார கவுரி அம்மனுக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆகவே, அம்மனுக்கு அன்றாடம் பூஜை நடத்த அனுமதிக்க கோரி, 2012 ஆகஸ்ட் 18-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி வாசிகளான ராக்கி சிங், மஞ்சு வியாஸ், சீதா சாஹு, ரேகா பாதக் மற்றும் லஷ்மி தேவி ஆகியோர்தான் இந்த மனுவை தாக்கல் செய்தனர். இதை வாரணாசியின் சிவில் நீதிமன்ற நீதிபதி ரவிக்குமார் திவாகர் விசாரிக்கிறார். இவ்வழக்கில் சிங்கார கவுரி அம்மன் கோயிலின் அமைப்பு குறித்து வீடியோ பதிவுகளுடன் கள ஆய்வு நடத்த கடந்த மாதம் 8-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆய்வை எதிர்த்து உ.பி. அரசு மற்றும் அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் வாராணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை ஏற்க மறுத்துவிட்ட நீதிமன்றம், கள ஆய்வை 17-ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, அஞ்சுமன் இன்தஜாமியா மசூதி கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்று பரிசீலித்தது. பின்னர், தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், “இன்னும் வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்க்காததால், இப்போது கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது” என்று கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து, மசூதியில் ஆய்வு தொடங்கி இருக்கிறது. இந்த ஆய்வுக் குழுவில் வழக்கறிஞர் ஆணையர் அஜய்குமார் மிஸ்ரா, சிறப்பு வழக்கறிஞர் விஷால் சிங், துணை வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், மனுதாரர்கள், மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் என மொத்தம் 36 பேர் கள ஆய்வுக்காக கியான்வாபி மசுதிக்கு வந்தனர். இதையொட்டி, மசூதியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவு வரை போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.


Share it if you like it