தமிழ்த் தாத்தா உ.வே.சா.
(“இந்தப் பெரியவரைப் பார்த்து, இவருடைய சிறந்த உரையைக் கேட்ட பிறகு, இவர் அடி நிழலிலிருந்து, தமிழ் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எழுகிறது“- மகாத்மா காந்தி, 27.3.1937)
சோழ நாட்டில், பாபநாசம் என்னும் நகருக்கருகில், உத்தமதானபுரம் என்ற கிராமத்தில், 19.2.1855இல் அவதரித்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் பெரும் கவிஞராகவும் சிறந்த புலவராகவும் திகழ்ந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் பயின்றார். உடனிருந்து பல வகையான தமிழ் நூல்களையும் அவர் கூற, இவர் எழுதினார். திருவாவடுதுறை மடத்தின் ஆதீனகர்த்தர்களாக இருந்த ஸ்ரீசுப்பிரமணிய தேசிகருடன் பழகுவதும், அந்த மடத்துக்கு வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும், வடமொழி வாணரிடத்திலும், சங்கீத வித்வான்களிடத்திலும் நெருங்கிப் பழகுவதும் போன்ற செயல்களால் இவர்களுக்குக் கிடைத்த அனுபவம் வேறு யாருக்கும் கிடைத்தற்கு அரிது. பெரும் புலவர்களுடைய தொடர்பால், பல நூல்களின் அறிவு இவருக்கு உண்டாயிற்று. பல கலை அறிந்தவர்களின் நட்பினால், பல துறைகளிலும், அறிவு சிறந்தது. வெவ்வேறு ஊர்களுக்குத், தம்முடைய ஆசிரியருடன் செல்ல வேண்டி இருந்தமையால், பல தலங்களைப் பற்றிய செய்திகளும், பல பெரிய மனிதர்களின் பழக்கமும், இவருக்குக் கிடைத்தன.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் கல்வி கற்றவர், தியாகராச செட்டியார் என்ற பெரும்புலவர். கும்பகோணம் அரசாங்கக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்து, ஓய்வு பெறும் வேளையில் தம்முடைய இடத்தில் ஐயரவர்களை நியமிக்கும்படி செய்தார். அந்த நன்றியை என்றும் மறவாமல் இருக்க, தன் இல்லத்திற்குத் ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் வைத்தார்.
கல்லூரியில் ஆசிரியராகப் புகுந்த ஆண்டில், கும்பகோணத்தில் மாவட்ட நடுவராக இருந்த சேலம் இராமசாமி அவர்களின் பழக்கம் உண்டாயிற்று. அவரின் விருப்பத்தின் காரணமாகச் ‘சிந்தாமணி’யைப் பாடம் சொல்லும் பெருமையை பெற்றார். இதன் காரணமாகச் சிந்தாமணியின் ஏட்டுச் சுவடியை வைத்துக் கொண்டு பாடம் சொன்னார்கள். சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையைப் படித்தார்கள். அவருடைய உரைப் போக்கும், மேற்கோள்களும் வியப்பில் ஆழ்த்தின. உடனே இதைப் பதிப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் விடாமுயற்சியாக, பல சோதனை, வேதனைகளுக்கிடையே, 1887 ஆம் ஆண்டு, சிந்தாமணியை வெளியிட்டார்கள்.
சிந்தாமணியைக் கண்ட தமிழ்நாட்டினர், மிகவும் ஆனந்தமடைந்தனர். அது முதல், பழைய நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்.
டாக்டர் உ.வே.சா.வின் படைப்புக்கள்:
சிந்தாமணிக்குப் பின், பத்துப்பாட்டு பதிப்பித்து வெளியிட்டார். ஒன்றன்பின் ஒன்றாக, சிலப்பதிகாரம், புறநானூறு, மணிமேகலை என்பவை வெளி வந்து, தமிழ் அன்னையின் அழகுக்கு அழகு சேர்த்தன. ஐம்பெருங் காப்பியங்கள் நூல்களில் கிடைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி என்ற மூன்று பெருங் காப்பியங்களைத் தமிழ் உலகத்துக்கு அர்ப்பணித்தார். இதுவரை வளையாபதி, குண்டலகேசி என்ற இரு பெருங் காப்பியங்கள் கிடைக்கவில்லை என்பது, வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
எட்டுத் தொகைகளில் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு என்பன போன்ற நூல்களை முயன்று தேடிப் பதிப்பித்தார்கள். பெருங்கதை, புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை என்னும் இலக்கிய, இலக்கணங்கள் வெளி வந்தன.
இவற்றையன்றி, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருக்காளத்திப் புராணம் முதலிய பல புராணங்களும், கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ், இரட்டை மணி மாலை, அந்தாதி, குறவஞ்சி முதலிய பல வகைப் பிரபந்தங்களும் குறிப்புரைகளுடன் வெளிவந்தன. தம்முடைய ஆசிரியர் இயற்றிய பிரபந்தங்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தொகுதியாக வெளியிட்டார்கள்.
டாக்டர் உ.வே.சா. அவர்களின் பதிப்பு முறை:
பல இடங்களில் இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுக்கு, சிதைவு உண்டாகியிருக்கும். அவற்றையெல்லாம் பல நூல் அறிவினாலும், இயற்கையான அறிவுத் திறமையாலும், விடா முயற்சியாலும், திருவருளின் துணையாலும் ஆராய்ந்து, செப்பம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நூலிலும் முன்னே உள்ள முகவுரையும், ஆசிரியர் வரலாறும், நூலைப் பற்றிய குறிப்புகளும், பிற செய்திகளும் மிக மிக அற்புதமானவை. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும், அடிக்குறிப்பில் பல வகையான விளக்கங்களும், பல நூல்களிலிருந்து எடுத்த, ஒப்புமைப் பகுதிகளும் காட்சி தரும். அவை பரந்த நூற்புலமைக்குச் சான்றாக விளங்கும். இறுதியில் நூலில் கண்ட சொற்களுக்கும், பொருள்களுக்கும் அகராதி இருக்கும். ஆசிரியரின் உதவியின்றியே பயிலும் வகையில் அமைந்தவை.
முன்னுரை முதலியவற்றை எழுதி, உரைநடை எழுதும் ஆற்றலைச் சிறிய அளவிலே வெளிப்படுத்தியவர், தாம் பதிப்பித்த நூல்களின் அங்கமாக மணிமேகலைக் கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் என்பவற்றை எழுதியளித்தார்.
1903 ஆம் ஆண்டு இறுதியில், பேராசிரியர் உ.வே.சா. அவர்கள், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரிக்கு மாற்றலாகி வந்தார். 1919 ஆம் ஆண்டு வரை, மாநிலக் கல்லூரியில் சிறப்பாகத் தமிழ்த் தொண்டாற்றினார்.
கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றிய போது தொடங்கிய பதிப்பு, ஆராய்ச்சி, முதலியவை உள்ளிட்ட இவர் தம் உயரிய தமிழ்த் தொண்டு மாநிலக் கல்லூரியிலும் தொடர்ந்து பல மடங்கு பெருகின.
கல்லூரியில் வேலையாக இருந்த போதே, வீட்டில் தனியே பலர் பாடம் கேட்டார்கள். அவர்களில் திருப்பனந்தாள் காசி மடத்தினைச் சேர்ந்த சொக்கலிங்கத் தம்பிரான், மகோபாத்தியாய ம.வீ.ராமானுஜாசாரியார் போன்றோர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களிடமிருந்து, ஆராய்ச்சி முறையைக் கற்றுக் கொண்டு, தாமே நூல்களை வெளியிட்டவர்கள் சிலர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், இ.வை. அனந்தராமையர் முதலியவர்கள் இத்தகைய வரிசையில் இருந்தவர்கள்.
1924 முதல் 1927 வரையில், உ.வே.சா. அவர்கள் ராஜா அண்ணாமலை செட்டியாரவர்கள் நிறுவிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் தலைவராக இருந்தார். இந்த மீனாட்சிக் கல்லூரி தான், இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக விளங்குகிறது.
பட்டங்களும் பிற பதவிகளும்:
1903 ஆம் ஆண்டில், கௌரவப் பத்திரம் நல்கி, சிறப்பித்தது. 1905 ஆம் ஆண்டு, ஆயிரம் ரூபாய் பரிசளித்து, பாராட்டியது. 1925 ஆம் ஆண்டு, மதுரைத் தமிழ்ச் சங்கத்தார், ரூ.5000 கொண்ட பணமுடிப்பைப் பரிசாக அனுப்பிச் சிறப்பித்தனர். 1906ஆம் ஆண்டு ‘மகாமகோ பாத்தியாய’ என்ற பட்டம் அரசாங்கத்தாரால் இவருக்கு அளிக்கப் பெற்றது.
1917 ஆம் ஆண்டு, “பாரத தர்ம மகா மண்டபத்தார்” என்னும் பெரும் சபையினர், ‘திராவிட வித்யா பூஷணம்’ என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கிப் பாராட்டினர். 1925 ஆம் ஆண்டு, காஞ்சி காமகோடி பீடாதிபதிகளால், ‘தட்சிணாத்ய கலாநிதி’ என்ற விருது வழங்கப்பட்டது.
1932 ஆம் ஆண்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தினர் ‘டாக்டர் பட்டம்’ வழங்கிச் சிறப்பித்தனர். பௌத்த சமயத்தவர்களால், ‘பௌத்த சமயப் பிரவர்த்தனாசிரியர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஜைன சமயப் பெண்மணி ஒருவர், ‘பவ்ய ஜீவன்’ என்ற பட்டப் பெயரால் அழைப்பாராம்.
டாக்டர் உ.வே.சா அவர்கள், தமிழ்ப் பேராசிரியராக மட்டும் பணி செய்யாமல், பல மதிப்புமிக்க 12 பதவிகளையும் வகித்தார். மூன்று முறை செட்டி நாட்டிலுள்ள மேலைச் சிவபுரி சன்மார்க்க சங்கத்தின் தலைவராகவும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், நிரந்தர உறுப்பினராகவும் விளங்கியமையும் குறிப்பிடத்தக்கன.
இப்படிப்பட்ட பதவிகளையும், பட்டங்களையும், பெற்றவர், இல்லற வாழ்வின் 80 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், 1935 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி, அவர்களுடைய சதாபிஷேக விழாவைத் தமிழுலகம் முழுவதும் கொண்டாடியது. சென்னையில் பல்கலைக்கழக மண்டபத்தில், இவ்விழா மிகமிகச் சிறப்பாக நடைபெற்றது.
குறுந்தொகையை விரிவான உரையுடன் பதிப்பித்தார். சிவக்கொழுந்து தேசிகர், குமரகுருபரர் என்னும் புலவர்களின் பிரபந்தத் திரட்டுகள் குறிப்புரையுடன் வெளியாயின. தமிழன்பர்களின் விருப்பப்படி தம்முடைய வரலாற்றை, ‘என் சரித்திரம்’ என்ற தலைப்பில் 1940 ஆம் ஆண்டு, 122 அத்தியாயங்களோடு சுயசரித்திரமாக, ‘ஆனந்த விகடனில்’ கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், பல இன்னல்களையும் தாண்டி, பல தமிழ் இலக்கிய நூல்களை அச்சுப் பதிப்பு செய்ததில், பெரும் பங்கு வகித்தார்.
– புலவர் ஞா. மேகலா