3-வது முறையாக உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

3-வது முறையாக உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

Share it if you like it

செஸ் போட்டியில் உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்ஸனை, தொடர்ந்து 3-வது முறையாக வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.

தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. இளம் வயதிலேயே செஸ் விளையாட்டில் அசத்திய இவர், வெகு விரைவிலேயே கிராணட் மாஸ்டர் பட்டமும் வென்றார். பல்வேறு பட்டங்களை வென்றிருக்கும் இவர், தற்போது அமெரிக்காவின் மியாமி நகரில் நடந்து வரும் எஃப்.டி.எக்ஸ். கிரிப்டோ செஸ் போட்டியில் பங்கேற்றிருக்கிறார். சுமார் 1.6 மில்லியன் டாலர்களை பரிசாக வழங்கும் மெல்ட்வாட்டர்ஸ் சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப் பயணத்தின் 2-வது பெரிய நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. 8 வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டியில், ஒவ்வொரு வீரரும் மற்ற 7 வீரர்களுடன் ஒரு முறை நேருக்கு நேர் மோத வேண்டும். ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் வீரர்களுக்கு 7,500 டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், போட்டியின் முடிவில் 1 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின் போனஸாக வழங்கப்படும்.

இந்த போட்டியில்தான், செஸ் போட்டியில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்ஸனை 3-வது முறையாக வீழ்த்தி இருக்கிறார் பிரக்ஞானந்தா. தொடரின் 7-வது சுற்றில் இந்த சாதனையை படைத்தார் பிரக்ஞானந்தா. போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்ஸனை வீழ்த்தினார். எனினும், புள்ளிகள் அடிப்படையில் தொடரின் வெற்றியாளராக மேக்னஸ் கார்ல்ஸன் அறிவிக்கப்பட்டார். பிரக்ஞானந்தாவுக்கு 2-வது இடம்தான் கிடைத்தது. நிகழாண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஆன்லைன் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்ஸனை வீழ்த்தினார். தொடர்ந்து, மே மாதம் நடந்த செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியிலும் கார்ல்ஸனை பிரக்ஞானந்தா தோற்கடித்தார். தற்போதைய கிரிப்டோ செஸ் தொடரிலும் கார்ல்ஸனை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம், வெறும் 6 மாதங்களில் 3-வது முறையாக உலக சாம்பியனை வீழ்த்தி புதிய சாதனை படைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா.


Share it if you like it