சர்வதேச ஆட்சி முறை தோல்வி: பிரதமர் மோடி ஓப்பன் டாக்!

சர்வதேச ஆட்சி முறை தோல்வி: பிரதமர் மோடி ஓப்பன் டாக்!

Share it if you like it

சர்வதேச அளவிலான ஆட்சி முறை தோல்வியடைந்து விட்டதாக, பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

டெல்லி கவர்னர் மாளிகையில் நடந்து வரும், ஜி 20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தின் முதல் அமர்வை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசுகையில், ”உலகின் பல பகுதிகள் இன்று பிரச்னையில் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த சில வருடங்களாகவே உலகம் அனுபவித்து வரும் காலநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று பொதுமுடக்கம், நிதி நெருக்கடி, பயங்கரவாதம், போர் போன்றவை சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பல வருட கால முன்னேற்றங்களுக்கு பின்னர், நீடித்த வளர்ச்சியின் இலக்குகளை எட்டுவதில் இன்று நாம் பின்னோக்கிச் செல்லும் அபாயத்தில் இருக்கிறோம். பல வளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய, தாங்க முடியாத கடன்களில் போராடுகின்றன. பணக்கார நாடுகளால் ஏற்படுகின்ற வெப்பமயமாதல் விளைவுகளையும் அந்நாடுகள் எதிர்கொள்கின்றன. இதனால்தான், இந்தியா தலைமை வகிக்கும் இந்த ஜி 20 மாநாடு, உலகளாவிய தெற்கின் குரலாக ஒலிக்க முயல்கிறது.

உலகம் தீவிரமாக பிரிந்திருக்கும் நேரத்தில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். தற்போது இந்த அறையில் இல்லாதவர்களுக்காகவும் (இதில் பங்கேற்காத நாடுகளுக்காகவும்) நாம் பொறுப்பேற்க வேண்டும். முடிந்தவரை நம்மால் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்னைகள் உருவாவதை நாம் அனுமதிக்கக் கூடாது. உலகிற்கு தலைமை வகிக்க முயலும் எந்தவொரு குழுவும், பாதிக்கப்படுகிறவர்களின் கருத்துக்களை கேட்காதபோது, அக்குழுவால் உலகளாவிய தலைமைக்கு உரிமை கோர முடியாது. நாம் அனைவரும் எது நம்மை ஒருங்கிணைக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எது நம்மை பிரிக்கிறது என்பதில் இல்லை” என்று பேசியிருக்கிறார்.

பிரதமரின் இந்த பேச்சானது உக்ரைன் – ரஷ்யா போர், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடனில் சிக்கித் தவிப்பது, பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாதம் ஆகியவை தொடர்பானதாக இருப்பது, அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Share it if you like it