தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரமாக திகழ்கிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் சிதம்பரத்தில் கடந்த 4 நான்கு நாட்களாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அந்தவகையில், விழாவின் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டியக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு பதங்கங்களை ஆளுநர் வழங்கினார். இதனை தொடர்ந்து, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ; நாட்டியத்தின் உன்னத மன்னருக்கு (நடராஜருக்கு) ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வரும் குழுவினருக்கு நன்றி. நடராஜரின் ஆசி பெற்ற இவ்விடத்திற்கு வந்ததால், நானும் ஆசி பெற்றதாக கருதுகிறேன். நடராஜர் ‘ஆதி கடவுள்’ என்பது நம் அனைவரும் அறிந்தது. சனாதன தர்மத்தை பொறுத்த வரை மனித படைப்புகள் பஞ்ச பூதங்களுடன் இணைந்துள்ளது. அந்த பஞ்ச பூதங்களில் நான்கு தமிழகத்தில் உள்ளது.
தமிழ்நாடு ஆன்மிகத்தின் தலைநகரம். சனாதனத்தின் மையப்புள்ளியே தமிழகம்தான். கலாச்சாரம் என்பது வாழும் இடங்களை பொறுத்தது அல்ல. பாரத கலாச்சாரம் என்பது சனாதன தர்ம வேரிலிருந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக அதைச் சொல்ல தயங்குகின்றோம்.
நாத்திகர்களை தள்ளி வைக்காதீர் நமது நடனமும் இசையும் இயற்கையோடு, ஆன்மிகத்தோடு ஒன்றியுள்ளது. அதனை தவறவிடக் கூடாது. நமது கலாச்சாரத்தில் நாத்திகர்களும் உள்ளனர். அவர்களை தள்ளி வைக்க முடியாது. அவர்களும் ஒன்றிணைந்ததுதான் பாரதம்.
பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா உள்ளது. நாம் இன்று உலகின், தலைமை பண்பில் இருகிறோம். உலக அளவில் பெருந்தொற்றை கடந்தோம். பெரிய நாடுகள் சட்டத்தையும், மனிதநேயத்தை மதிக்காமல் விட்டுவிட்டது. ஆனால், இந்தியா இவற்றையே தனது குறிக்கோளாக வைத்துள்ளது.
இதைதான் உலக நாடுகளும் இந்தியாவிடம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது. உலக அளவில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது, இவை அனைத்தையும் நம் பிரதமர் தான் செய்து கொண்டிருக்கிறார். இது இந்தியாவுக்கான நேரம்.
பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வரும் இந்தியா, இன்னும் 5 ஆண்டுகளில் உலகின் 3-வது பொருளாதார வல்லரசு நாடாக திகழும். அடுத்த 25 ஆண்டுகளில் 2047 ஆண்டில் இந்தியா முழுவதும் வளர்ச்சியடைந்த முன்னோடி நாடாக திகழும். ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளை கற்க வேண்டும். ஆனால், தாய்மொழியை விட வேறு எதுவுமில்லை. நமது அறிவியல் அடையாளம் என்பது நமது டி.என்.ஏ.வில் உள்ளது, நம் பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். ஆன்மிகத்தில் வேரூன்றிய நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வோம். இவ்வாறு ஆளுநர் பேசினார்.