தேனி அருகே அரசு விளம்பர சுவர் இடிந்து 10-ம் வகுப்பு மாணவியின் கால்கள் முறிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் – கற்பகவள்ளி தம்பதியின் மகள் ரூபிகா. ஆசாரிபட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில், முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள சில தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடந்தது. பணிகள் முடிந்ததும், திட்ட மதிப்பீடு மற்றும் திட்டம் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட திட்டப் பணி விளக்க சுவர் சுமார் 5 அடி உயரத்தில் கட்டப்பட்டது.
இந்த நிலையில், சம்பவத்தன்று ரூபிகா பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த விளம்பர சுவர் திடீரென இடிந்து ரூபிகாவின் கால்களில் விழுந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவியின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, மாணவியின் கால்களில் பிளேட் வைக்கப்பட்டு, மாவுக்கட்டு போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த மகள், கால்கள் முறிந்து வீட்டில் படுத்த படுக்கையானதால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரோ, அரசு அதிகாரிகளோ இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று மாணவியின் பெற்றோர் கூறினர். ஆகவே, தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.