மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்க வேண்டும்: கவர்னர் அதிரடி!

மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்க வேண்டும்: கவர்னர் அதிரடி!

Share it if you like it

மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று எண்ணித் துணிக என்கிற கலந்துரையால் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அதிரடியாகக் கூறியிருக்கிறார். தமிழக அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், கவர்னர் இப்படி பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றிபெற்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோரை ஊக்கப்படுத்தும் வகையில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் வெற்றிபெற்று அதிகாரிகளாக பணிபுரிபவர்கள், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோருடனான, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடும் ‘எண்ணித் துணிக’ என்கிற நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் அமைந்திருக்கும் கவர்னர் மாளிகையின் தர்பார் ஹாலில் இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 80 பேர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தேர்வர் குறித்தும் தனித்தனியாக பெயர், படிப்பு மற்றும் ஊர் என்ன என்பதை கேட்டறிந்த கவர்னர், பின்னர் தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த தேர்வர் ஒருவர், மாநில அரசு, மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றிற்கு இடையே கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு இருக்கும் நிலையில், நான் எதை பின்பற்றுவது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கவர்னர் ஆர்.என்.ரவி, “இந்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம் மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்” என்றார்.

அதேபோல, பண மதிப்பிழப்பு நல்லதா, இல்லையா என்ற கேள்விக்கு, எந்த ஒரு மாற்றம் என்றாலும், அதில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில், பணமற்ற பரிமாற்றத்தில் முழுமையை அடையவில்லை. இன்னும் பண பரிவர்த்தனை உள்ளது. ஆனால், தெருவோர கடைகள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை சென்றடைந்துள்ளது என்றார். பதற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்கு, ஆழ்ந்த மூச்சு விடுதல், தண்ணீர் சரியாக குடிக்க வேண்டும், சரியான நேரத்தில் தூங்க வேண்டும் என்றவர், நாவல் ஒன்றில் இருக்கும் வரிகளை நினைவுகூர்ந்தார். மேலும், 21 வயதில் நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகி உள்ளீர்கள். அந்த நம்பிக்கையை உடன் எடுத்துச் செல்லுங்கள். சிவில் சர்வீஸ்தான் உலகின் முடிவு என்பதல்ல. இதில் வெற்றி இல்லை என்றாலும் எதுவும் மாறப் போவதில்லை. உங்களை கேள்வி கேட்பவர்கள் மனிதர்கள்தான் என்று ஊக்கம் அளித்தார்.

மேலும், தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என உள்நோக்கத்துடன் மொழிபெயர்த்து அழைக்கவில்லை, அரசியலுக்காக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு என்கின்றனர் என்று கூறினார்.


Share it if you like it