குஜராத், இமாச்சலில் காங்கிரஸ் தோற்கும்: பிரசாந்த் கிஷோர் தடாலடி!

குஜராத், இமாச்சலில் காங்கிரஸ் தோற்கும்: பிரசாந்த் கிஷோர் தடாலடி!

Share it if you like it

எதிர்வரும் குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையும் என்று பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தற்போது 2 மாநிலங்களில் மட்டுமே தனித்து ஆட்சி செய்கிறது. மேலும், 2 மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில், நிகழாண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆகவே, மேற்கண்ட இரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. ஆனால், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த படேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகினார். இம்மாநிலத்தில் படேல் சமூகத்தினர்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, ஹர்திக் படேல் விலகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எனவே, இமாச்சல பிரதேசத்திலாவது வெற்றிபெற முடியுமா என்று காங்கிரஸ் கட்சித் தலைமை சிந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முக்கியப் பிரமுகர்களும், நாடு முழுவதும் இருந்து 430 நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, கட்சியை வலுப்படுத்து வேண்டும் என்பதால், அது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், நாட்டின் பொருளாதார நிலவரம், கொரோனா, வேளாண் விவகாரங்கள், காஷ்மீர் தொகுதி மறுவரையறை, மத்திய மற்றும் மாநில உறவுகள், மத அடிப்படையில் வாக்காளர்கள் ஒன்று சேர்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், எதிர்வரும் குஜராத், இமாச்சல பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “உதய்பூரில் நடந்து முடிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டம் பற்றிய உங்களது கருத்துகளை கூறுங்கள் என்று தொடர்ந்து என்னிடம் கேட்கிறீர்கள். என்னுடைய பார்வையில், எதிர்வரும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல் தோல்வி வரை, காங்கிரஸ் தலைமைக்கு சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர அர்த்தமுள்ள எதனையும் சாதிக்க இந்த கூட்டம் தவறி விட்டது” என்று கூறியிருக்கிறார். இவ்வாறு காங்கிரஸ் தோல்வியைத் தழுவும் என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டிருப்பதுதான் காங்கிரஸ் கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சமீபத்தில், தங்களது கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுக்க காங்கிரஸ் தலைமை பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்ததும், அந்த ஆஃபரை பி.கே. மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


Share it if you like it