பிரதமர் மோடி பிரசாரத்தில் திடீர் பரபரப்பு: சுட்டு வீழ்த்தப்பட்ட ‘ட்ரோன்’; 3 பேர் கைது!

பிரதமர் மோடி பிரசாரத்தில் திடீர் பரபரப்பு: சுட்டு வீழ்த்தப்பட்ட ‘ட்ரோன்’; 3 பேர் கைது!

Share it if you like it

குஜாரத் மாநிலத்தில் பிரதமர் மோடி பிரசாரத்தில் ஊடுருவிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது..

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரத்தின்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றனர். குறிப்பாக, பிரதமர் மோடி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்ருமான கெஜ்ரிவால், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.

அந்த வகையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும் பல்வேறு தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அகமதாபாத்தில் உள்ள பாவ்லா பகுதியில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் பிரசாரம் செய்யும் இடத்திலிருந்து 2 கி.மீ. சுற்றளவுக்கு ட்ரோன் உள்ளிட்ட விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை 4.30 மணி அளவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவிருந்த மைதானம் அருகே திடீரென்று ஒரு ட்ரோன் பறந்து வந்து பரபரப்பை கிளப்பியது.

இதை கவனித்த பிரதமரின் பாதுகாவலர்கள் அலெர்ட் கொடுத்தனர். தொடர்ந்து அந்த ட்ரோனை என்.எஸ்.ஜி. கமான்டோக்கள் சுட்டு வீழ்த்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அந்த ட்ரோனில் வெடிபொருள்கள் போன்ற எந்த ஊறு விளைவிக்கும் பொருள்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதேசமயம், ட்ரோனை இயக்கிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரதமரின் பேச்சை பதிவு செய்யத்தான் ட்ரோனை பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறார்கள். எனினும், தடையை மீறி ட்ரோனை இயக்கியதில் சதி இருக்கிறதா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Share it if you like it