தமிழக அரசுக்கு கெடு : அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் !

தமிழக அரசுக்கு கெடு : அதிரடி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் !

Share it if you like it

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து ஆறு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி, மருத்துவர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலிக்கக் கோரி அரசு மருத்துவர் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. அச்சமயம், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அதனை செயல்படுத்த முடியவில்லை என கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கை மனுவை ஆறு வாரங்களில் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Share it if you like it